சந்திரயானுக்கு 40 நாட்கள்! லூனாவுக்கோ பத்தே நாட்கள்! எப்படி சாத்தியமானது ரஷ்யாவால்..?

0 4374

இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு பல நாட்கள் கழித்து அனுப்பப்பட்ட ரஷ்யாவின் லூனா-25 விண்கலம், சந்திரயானுக்கு முன்பே நிலவின் தென் துருவத்தை அடைய உள்ளது. நிலவின் தென்துருவத்தில் முதலில் தரையிறங்கிய நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இது எதிர்பாராத திருப்பமாக அமைந்துள்ளது.

நிலவில் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இதே தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய லூனா-25 விண்கலத்தை ஆகஸ்ட் 11-ம் தேதி விண்ணில் ஏவியது ரஷ்யா. இதில் சந்தியரான்-3, 22 நாட்கள் கழித்து ஆகஸ்ட் 5-ம் தேதி நிலவு சுற்றுப்பாதையில் நுழைந்தது. ஆனால் ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட 6-ம் நாளே நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்துவிட்டது.

சந்திராயனுக்கு இத்தனை நாட்கள் தேவைப்படும் நிலையில் லூனாவால் இவ்வளவு குறுகிய காலத்தில் எப்படி இது சாத்தியமானது என்று கேட்டால், விண்கலன்களின் எடை, எரிபொருள் செலவு, திட்டசெலவு ஆகியவற்றை சுட்டிக்காட்டுகின்றனர், விஞ்ஞானிகள்.

1,700 கிலோ எடை கொண்ட லூனா-25 விண்கலம், புவிவட்ட பாதையில் சுற்றாமல், முழுக்க எரிபொருளின் உதவியுடன் மட்டுமே உந்தி தள்ளப்பட்டு, நேராக பூமியிலிருந்து பயணித்து நிலவின் சுற்றுவட்டபாதையில் நுழைந்தது. ஆனால் 3,900 கிலோ எடை கொண்ட சந்திரயான்-3 விண்கலம், பூமியின் சுற்றுவட்டப்பாதையை 5 முறை சுற்றி புவி ஈர்ப்பு விசையின் உதவியுடன், எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தி நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது. சந்திரயான்-மூன்றும், லூனா-25 போலவே பயணித்திருந்தால், தற்போதைய திட்ட செலவை விட 3 மடங்கு செலவு ஆகியிருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்தியாவை முந்த வேண்டும் என்பற்காக ரஷ்யா லூனா-25-ஐ நிலவுக்கு அனுப்பவில்லை என்கின்றனர் விஞ்ஞானிகள். 2021-ம் ஆண்டே ரஷ்யா திட்டமிட்ட லூனா-25-ன் பயணம், கொரேனா காலம், உக்ரைன் போர் போன்ற காரணங்களால் கால தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. மேலும், காலநிலை, புவி மற்றும் சந்திரனின் அமைப்பு போன்ற சாதகமான சூழல்களால், லூனா விண்கலத்தை ஏவ ரஷ்யாவும் தற்போதைய காலகட்டத்தை தேர்வு செய்ததாக சொல்லப்படுகிறது.

நிலவில் ஒரு பகல் பொழுது 14 பூமி நாட்கள் என்பதால், அங்கு சூரிய வெளிச்சம் கிடைக்கும் நேரத்தில் தரையிறங்கினால் மட்டுமே திட்டமிட்டபடி ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். அதன்படி சூர்ய உதயம் தொடங்கும் நேரத்தை கணக்கிட்டு, விக்ரம் லேண்டரை வரும் 23ம் தேதி தரையிறக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது. அதே சமயம், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க ரஷ்யா தேர்வு செய்துள்ள பகுதியில் சூர்ய வெளிச்சம் முன்கூட்டியே தொடங்கும் என்பதால், இந்தியாவுக்கு முன்பாகவே 21 அல்லது 22-ம் தேதிகளில் லூனா-25 நிலவில் தரையிறக்கப்பட உள்ளது.

பூமி அதன் அச்சில் 23.5 டிகிரி சாய்ந்து சூரியனை சுற்றி வருவதால் பெரும்பாலும் சூரிய ஒளி கிடைத்துவிடும் நிலையில், நிலவோ அதன் அச்சில் வெறும் 1.5 டிகிரி மட்டுமே சாய்ந்து சுற்றுவதால் அதன் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் சூரிய ஒளி கிடைப்பதில்லை. குறிப்பாக தென்துருவத்தின் சில இடங்கள் நிரந்தர நிழல் பகுதியாக இருப்பதால் அங்கு என்ன இருக்கிறது என்பதை அரிய உலக நாடுகள் எப்போதும் ஆர்வத்துடன் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments