செந்தில் பாலாஜி வழக்கு.. அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு..!

0 1477

செந்தில் பாலாஜியை பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்ததை உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

செந்தில் பாலாஜியின் கைது மற்றும் அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டதை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அவரது மனைவி மேகலாவும் தனியாக ஒரு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்குகள் நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973-இன் 167-வது பிரிவின் படி, காவல் நிலையம் ஒன்றின் பொறுப்பாளரோ, வழக்கு ஒன்றின் விசாரணை அதிகாரியாக உள்ள காவல் துறை அதிகாரியோ தான் குற்றஞ்சாட்டப்பட்டவரை கஸ்டடியில் எடுக்க முடியும் என்று தெரிவித்தார்.

விஜய் மதன்லால் சவுத்ரி என்பவரின் வழக்கில் அமலாக்கத் துறையினர் காவல்துறை அதிகாரிகள் அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை சுட்டிக்காட்டிய அவர், எனவே செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் தங்கள் கஸ்டடியில் எடுக்க முடியாது என்றார். நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட 15 நாட்களுக்குப் பின் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு கஸ்டடி வழங்கக் கூடாது என்ற தீர்ப்பை குறிப்பிட்ட கபில் சிபல், செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்த முதல் 15 நாட்களில் அமலாக்கத் துறை கஸ்டடி பெறாததால், இனி அவரை கஸ்டடியில் விடக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் 19-வது பிரிவின் கீழ் அமலாக்கத்துறைக்கு கைது செய்யும் அதிகாரங்கள் உண்டு என்று தெரிவித்தார். குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரை கைது செய்வது நீதிமன்ற காவலில் அடைப்பதற்காக மட்டுமே அல்ல என்று வாதிட்ட துஷார் மேத்தா, கைதுக்கான நோக்கமே புலன் விசாரணை செய்வது தான் என்றார். 15 நாட்களுக்குப் பின் கஸ்டடி எடுக்கக் கூடாது என்று பொதுவாக கூறினால், அது அபத்தமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்றும் அவர் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட கபில் சிபல், இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியில்லை என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு நீதிபதிகளை கேட்டுக் கொண்டார். ஆட்கொணர்வு வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற 3-வது நீதிபதி சி.வி. கார்த்திகேயன், செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்த கால கட்டத்தை கணக்கில் எடுத்துக் கொள்வதா வேண்டாமா என்பது பற்றி டிவிஷன் பெஞ்ச் முடிவு செய்யும் என்று உத்தரவிட்டிருப்பதை சுட்டிக்காட்டிய கபில் சிபல், ஒருவேளை தங்களுக்கு எதிராக டிவிஷன் பெஞ்ச் முடிவு செய்து, அமலாக்கத் துறைக்கு கஸ்டடி வழங்கி விட்டால், தாங்கள் எங்கே போவது என்று வினவினார். அதற்கு, அப்படி எதுவும் ஆகாது என்று கூறி கபில் சிபலின் கோரிக்கையை நீதிபதி போபண்ணா நிராகரித்தார்.

பின்னர் வழக்கை வரும் 26-ஆம் தேதிக்கு தள்ளிவைத்ததுடன், மேல்முறையீடு மனுக்களுக்கு பதில் அளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments