15,000 அமெரிக்க டாலர் பரிசாக அனுப்பியுள்ளதாக கூறி மோசடி.. நம்பி ஏமாந்து உயிரை விட்ட இளம்பெண்.. !!

சென்னையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்யக் காரணமான நைஜீரிய நாட்டை சேர்ந்த மோஸா என்பவரை தனிப்படை போலீசார் டெல்லியில் கைது செய்தனர்.
அழகு நிலையத்தில் பணியாற்றிவந்த அஸ்வினி என்பவர் ஓட்டேரியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அஸ்வினியின் செல்போனை போலீசார் ஆய்வு செய்ததில் அவருக்கு சமூக வலைத்தளம் மூலம் ஒரு நபரின் அறிமுகம் கிடைத்தது தெரியவந்தது.
அந்த நபர் தான் லண்டனில் வசித்துவருவதாகவும், அஸ்வினியை திருமணம் செய்துகொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
கடந்த வாரம் அஸ்வினியைத் தொடர்பு கொண்ட அந்த நபர் 15 ஆயிரம் டாலர் பரிசாக அனுப்பி உள்ளதாக கூறியுள்ளார்.
சிறுது நேரத்தில் அஸ்வினியைத் தொடர்பு கொண்டு சுங்கத்துறை அதிகாரி போல் பேசிய மற்றொரு நபர் தான் கூறும் வங்கி கணக்கில் 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி பார்சலை பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.
அஸ்வினி 25,000 ரூபாய் செலுத்தியதும் மீண்டும் அவரை தொடர்பு கொண்டு 45 ஆயிரம் ரூபாய் செலுத்துமாறும் இல்லாவிட்டால் போலீசார் வந்து கைது செய்துவிடுவார்கள் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் மனமுடைந்த அஸ்வினி கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் விசாரணையில், டெல்லியில் இயங்கிவரும் நைஜீரிய நாட்டு சைபர் கிரைம் கும்பல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
டெல்லி விரைந்த போலீசார் மோஸா என்பவனை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments