''செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்....'' - நீதிபதி சி.வி. கார்த்திகேயன்

0 4486

செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கை சட்டத்திற்கு உட்பட்டது தான் என்பதால், அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளதாக இவ்வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் கூறியுள்ளார். நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பு சரியானது என்று அவர் உறுதி செய்துள்ளார்...

செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கையில் சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதனை முதலில் விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய இரு நபர் பெஞ்ச் இரு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதையடுத்து இவ்வழக்கு 3-வது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது.

இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் திறந்த நீதிமன்றத்தில் உணவு இடைவேளைக்குக் கூட செல்லாமல் நீதிபதி சி.வி. கார்த்திகேயன் தீர்ப்பளித்தார். அப்போது மூன்று முக்கிய இடங்களில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை கூறி இருப்பதாக சுட்டிக்காட்டிய நீதிபதி அவற்றின் மீது தமது தீர்ப்பை வழங்கினார்.

முதல் கேள்வி. செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா? இதில் நீதிபதி நிஷா பானு, கைது சட்டவிரோதமானது என்பதால், கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடியாது என்று கூறி இருந்தார். நீதிபதி பரத சக்கரவர்த்தி, கைது நடவடிக்கை சட்டத்திற்கு உட்பட்டது தான் என்பதால் மேல் விசாரணைக்கு கஸ்டடி தேவையானது என்றும் கஸ்டடி எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது என்றும் தெரிவித்து இருந்தார். இவற்றுள் நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை ஏற்பதாக தெரிவித்த நீதிபதி சி.வி. கார்த்திக்கேயன், கஸ்டடி எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது என்றார்.

இரண்டாவது கேள்வி. நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவு பிறப்பித்த பின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? இதில் நீதிபதி நிஷா பானு, சட்டவிரோத கைது என்பதால், நீதிமன்ற காவலுக்கு பின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என்று கூறி இருந்தார். நீதிபதி பரத சக்கரவர்த்தி, சட்டப்பூர்வமான கைது என்பதால், ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்ய முடியாது என்று தெரிவித்து இருந்தார். இதிலும் நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை ஏற்பதாக கூறிய நீதிபதி சி.வி. கார்த்திகேயன், நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட உடன் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி மனு செய்ததால் கைது சட்டப்பூர்வமானது என்பதை செந்தில் பாலாஜி மறைமுகமாக ஏற்றுக் கொண்டதாக கருதலாம் என்றார்.

மூன்றாவது கேள்வி. செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை, நீதிமன்ற காவல் காலமாக கருதலாமா? கூடாதா? இதில் நீதிபதி நிஷா பானு, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை, நீதிமன்ற காவல் காலமாக கருதி, அவரை விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார். நீதிபதி பரத சக்கரவர்த்தி, செந்தில்பாலாஜி சிகிச்சை பெறும் காலத்தை, நீதிமன்ற காவல் காலமாக கருத முடியாது என்றும் சிகிச்சைக்குப் பின் அவரை அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுக்கலாம் என்றும் தெரிவித்து இருந்தார். இதிலும் நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை ஏற்பதாக கூறிய நீதிபதி கார்த்திக்கேயன், செந்தில்பாலாஜி சிகிச்சை பெறும் காலத்தை, நீதிமன்ற காவல் காலமாக கருத முடியாது என்றும் சிகிச்சை முடிந்ததும் அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கலாம் என்றும் தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், தான் அப்பாவி என நிரூபிக்க குற்றம் சாட்டப்பட்டவருக்கு உரிமை உள்ள போதிலும், விசாரணைக்கு தடை ஏற்படுத்த முடியாது என்று நீதிபதி கூறியுள்ளார். கைதுக்கான காரணங்களை பெற மறுத்து விட்டு, அவற்றை வழங்கவில்லை என்று செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் முன் வைத்த வாதத்தை நிராகரித்துள்ள நீதிபதி, செந்தில் பாலாஜியும் சட்டத்துக்கு உட்பட்டவர் தான் என்றும் எனவே, கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

கைது செய்ய அதிகாரம் உள்ள அமலாக்கத் துறையினருக்கு காவலில் எடுத்து விசாரிக்கவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை புலன் விசாரணையை தொடரவும் அனுமதிக்கலாம் என்றும் நீதிபதி சி.வி. கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதையடுத்து தமது தீர்ப்பை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைப்பதாக நீதிபதி கார்த்திக்கேயன் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments