வடமாநிலங்களில் வெளுத்து வாங்கும் கனமழை... 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
வட மாநிலங்களில் சற்று தாமதாக தொடங்கிய பருவ மழை கடந்த வார இறுதியில் வலுவடைந்து, வெளுத்து வாங்கி வருகிறது. வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்டவற்றில் சிக்கி கடந்த 3 நாட்களில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த 3 நாட்களில் கனமழை-வெள்ளத்துக்கு 17 பேர் உயிரிழந்ததாகவும், மாநிலம் முழுவதும் 4 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 50 ஆண்டுகளில் காணாத மழை இது என்று மக்கள் தெரிவித்துள்ளனர். பியாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாண்டி நகரை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
நிலச்சரிவு காரணமாக மணாலி, லே பகுதிகளுக்கு இடையேயான தேசிய நெடுஞ்சாலையிலும், சண்டிகர்-மணாலி தேசிய நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மணாலியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அப்பகுதியில் இருந்த உணவு விடுதி ஒன்று அடித்துச் செல்லப்பட்டது.
இமாச்சலில் பல நீரேற்று நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாலும், குடிநீர் விநியோக குழாய்கள் சேதமடைந்துள்ளதாலும், அங்கு குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
பஞ்சாபின் சட்லஜ் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஹரியானாவின் பஞ்ச்குலாவில் மேம்பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. சாலையில் பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
ஹத்னிகுண்ட் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. அம்பாலா பகுதியில், காகர் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் குடியிருப்பு பகுதிகள் தண்ணீரில் மூழ்கின. அம்பாலா-சண்டிகர் நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, அம்பாலாவில் சமன் வாடிகா கன்யா குருகுல கட்டிடத்திற்குள் வெள்ளம் புகுந்ததால், அங்கிருந்த 730 மாணவிகளை, ராணுவத்தினர் தேசிய மீட்புபடை உதவியுடன் கயிறுகட்டி மீட்டனர்.
உத்தரகாண்டில் பெய்துவரும் கனமழையால் ஹரித்வாரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வீடுகள், கடைகள் உள்ளிட்டவற்றை வெள்ளம் சூழ்ந்தததுடன், பல்வேறு வாகனங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. நிலச்சரிவு காரணமாக பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.
டெல்லியின் யமுனா நதியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியின் பழைய ரயில்வே பாலம் பகுதியில் அபாய அளவை தாண்டி பாயும் வெள்ளத்தால் ரயில் மற்றும் இதர போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், உத்தரப்பிரசதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலும் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Comments