''டி.ஐ.ஜி. விஜயகுமார் உயிரிழப்பு.... சி.பி.ஐ விசாரிக்க வலியுறுத்தல்.... ஈ.டி., ஐ.டி.யைக் கண்டு அமைச்சர்களுக்கு பயம்...'' - இபிஎஸ்
கோவை சரக டிஐஜி தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட காவலர் நலவாழ்வுத் திட்டம் நீடித்திருந்தால், காவலர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக மாட்டார்கள் என்றும் இபிஎஸ் கூறியுள்ளார்.
திருச்செந்தூர் வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுப்பிரமணியசுவாமி கோவிலில் தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் சண்முக விலாச மண்டபத்தில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் சூரசம்ஹார மூர்த்திக்கு அர்ச்சனை செய்து எடப்பாடி பழனிசாமி தரிசனம் செய்தார்.
பின்னர் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி,
அதிமுக அமைச்சர்கள் மீதான வழக்குகள் தொடர்பாக ஆளுநருக்கு கடிதம் எழுதும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மீது உச்சநீதிமன்றத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார். ஊழல் குற்றஞ்சாட்டுக்கு உட்பட்டவரிடமே ஊழல் தடுப்பு பிரிவு இருந்தால் எப்படி நியாயமாக இருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவற்றைக் கண்டால், சில அமைச்சர்களுக்கு ஜூரம் வந்து விடுவதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் பயந்து போயுள்ளதாக தெரிவித்தார். அதிமுகவினருக்கு மடியில் கனமில்லாததால், வழியில் பயமில்லை என்றார் அவர்.
டிஐஜி விஜயகுமாருக்கு பணியிலும் மன அழுத்தம் இல்லை, குடும்பத்திலும் மன அழுத்தம் இல்லை என்று அதிகாரிகள் சொல்லும் போது பிறகு அவர் ஏன் தற்கொலை செய்தார் என்று அவர் வினவினார். மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படும் நிலையில், அவருக்கு ஏன் பணி கொடுத்தார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான பூர்வாங்க பணிகளை அதிமுக தொடங்கிவிட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Comments