ஓடும் ரெயிலில் மூச்சுத்திணறல்.. உதவிக்கு மருத்துவர் இல்லை.. அலட்சியத்தால் பலியான முதியவர்..! ரெயில்வே நிர்வாகம் மெத்தனம்

0 1741

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வந்த முத்து நகர் விரைவு ரெயிலில் குடும்பத்துடன் வந்த 74 வயது முதியவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் முதல் உதவி சிகிச்சை அளிக்க மருத்துவர் இல்லாததால் ஓடும் ரெயிலில் பலியானதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்...

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சரவணக்குமார், தனது தந்தை முருகேசனுடன் சொந்த ஊரான தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு முத்துநகர் விரைவு ரயிலில் முன்பதிவு பெட்டியில் வந்து கொண்டிருந்தார். அதிகாலை 3 மணியளவில் விருதாச்சலம் அருகே ரெயில் வந்த போது முதியவர் முருகேசனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

முதலுதவிக்கான மருந்துகளை அவருக்கு கொடுத்த குடும்பத்தினர் உடனடியாக டிடிஆர் மூலம் மருத்துவ உதவியை கோரியுள்ளனர். விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து மருத்துவரை ஏற்பாடு செய்வதாக கூறிய டிடிஆர் விழுப்புரம் ரயில் நிலைய மேலாளரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடைந்தும் கூட மருத்துவர்களை ஏற்பாடு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

முதியவர் முருகேசனுடன் குடும்பத்தினர் இறங்கி வர வேண்டும் எனவும், தாமதமாவதால் ரயில் புறப்பட்ட பின்னர் மருத்துவரை ஏற்பாடு செய்வதாக கூறியதால் முருகேசனின் குடும்பத்தினர் அதிருப்தி அடைந்ததாக கூறுகின்றனர்.

அவசர ஆம்புலன்ஸும் இல்லாமல் மருத்துவரும் இல்லாமல் ரயிலை விட்டு எப்படி முதியவரை இறக்குவது என பேசிக் கொண்டிருக்கும் போதே ரயிலுக்கு , அங்குள்ள நிலைய மேலாளர் கிரீன் சிக்னல் கொடுத்ததாகவும், இதனால் ஓடி வந்து ரயிலில் ஏறியதாகவும் அடுத்தடுத்து வந்த எந்த ரயில் நிலையத்திலும் மருத்துவர்கள் வராத நிலையில், முதியவர் சுயநினைவு இழந்துவிட்டார் எனக் கூறுகின்றனர். பின்னர் 6 மணியளவில் தாம்பரம் ரயில் நிலையம் வந்ததும் மருத்துவர் பரிசோதனை செய்ததில் முதியவர் முருகேசன் உயிரிழந்து விட்டார் என தெரிவித்ததாக கூறப்படுகின்றது

சுமார் 3 மணி நேரமாக ஒரு மருத்துவரை கூட ஏற்பாடு செய்யாத விழுப்புரம் ரயில்வே நிலைய மேலாளர் மற்றும் ஊழியர்களின் அலட்சியத்தால் ஒரு உயிர் பறிபோய் விட்டதாக முருகேசனின் குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர்

ரயில் பயணங்களில் முதியவர், குழந்தைகள், கர்ப்பிணிகள் என தினமும் பயணிக்கும் நிலையில் அவரசத்திற்கு ஒரு மருத்துவரை கூட ஏற்பாடு செய்யாத ரயில்வே ஊழியர்களின் செயல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ள நிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே மருத்துவ உதவி தேவை என்பதை சுட்டிக் காட்டி பதிவு செய்தால் அதற்காக ரயிலில் மருத்துவரை நியமிக்க விதிகள் உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments