விட்டா... தெருவுக்குள்ள நுழைய பாஸ்போர்ட் கேட்பானுங்க போல.. அரிவாளை காட்டி போலீசுக்கு மிரட்டல்..!

0 2282

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வழக்கு விசாரணைக்குச் சென்ற போலீசாரை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து  நிறுத்தி, அரிவாளை காட்டி மிரட்டிய ரவுடிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

ஒரு பெண்ணை மானபங்கப்படுத்தியதாக வந்த புகாரின் பேரில் விசாரிக்க சென்ற போலீசாரிடம், எப்படி எங்க ஏரியாவிற்குள் வரலாம் என்று தடுத்து நிறுத்தி இருவர் அலம்பல் செய்து மிரட்டல் விடுத்த காட்சிகள் தான் இவை..!

தேனி மாவட்டம் பெரியகுளம் , தோட்டி காலனி பகுதியைச் சேர்ந்த பிரபாகர் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தீபக் ரவிச்சந்திரன் மற்றும் காமராஜ் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் சம்பவத்தன்று பிரபாகரின் சகோதரியை தாக்கி ஆடையை கிழித்ததாக இவர்கள் இருவர் மீதும் புகார் அளிக்கப்பட்டது. அந்தப்பகுதிக்கு விசாரணைக்கு சென்ற போலீசாரை மறித்த தீபக் ரவிச்சந்திரன் எப்படி உள்ள வரலாம், ஊருக்குள் வருவதற்கு யாரு கிட்ட அனுமதி வாங்கின என்று ஒருமையில் கேட்டு கடுமையாக வாக்குவாதம் செய்தார்.

அவருக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் இரு பீர் கேன்களை இடுப்பில் சொருகிக்கொண்டு வந்த கொண்டை போட்ட ஆசாமி போலீசாரை கடுமையாக திட்டியதுடன், ஓடிச்சென்று வெட்டுவதற்கு அரிவாளை தூக்கி வந்தார், ஒரே போடாக போட்டால் தலை துண்டாகி விடும் என்று போலீசாருக்கு பகிரங்க மிரட்டல் விடுத்தார்.

அங்கிருந்த சில பெண்கள் போலீசாரின் காலில் விழுந்து நல்லா இருப்பீங்க... இங்க இருந்து போயிருங்க... என்று கையெடுத்து கும்பிட்டு கெஞ்சினர்.

அத்தோடில்லாமல் போதை ரவுடிகள் இருவரையும் சத்தம் போட்டு அங்கிருந்து இழுத்துச்சென்றனர்.

பாதிக்கப்பட்ட பெண் அருகில் நின்று தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என்று சத்தமிட்டார், அதற்கு பதிலடியாக அவர் தானாகவே நைட்டியை கிழித்துக் கொண்டதாக சில பெண்கள் எதிர்ப்பு குரல் கொடுத்தனர்.

நிலைமையை புரிந்து கொண்ட போலீசார் காவல் நிலையத்துக்கு சென்று தங்களை அரிவாளால் வெட்ட வந்த நிகழ்வை கூறியதும், காவல் ஆய்வாளர் தலைமையில் சென்ற கூடுதல் போலீசார், போதையில் வாக்குவாதம் செய்து போக்கு காட்டிய தீபக் ரவிச்சந்திரனை கைது செய்தனர். அரிவாளுடன் அலம்பல் செய்த கொண்டை காமராஜை தேடிவருவதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments