என்ன சார்.. நலமா..? ஆசிரியரை அடித்து துவைத்த மாணவன்.... கொரோனா பேட்ச் ரிவெஞ்ச்..!
பெரம்பலூர் அருகே 10 ஆம் வகுப்பில் தன்னை அடித்த ஆசிரியரை பழிக்கு பழிவாங்குவதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த கல்லூரி மாணவர் ஒருவர், ஆசிரியரிடம் வணக்கம் சொல்லி வம்பிழுத்து சரமாரியாக தாக்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது
நீயெல்லாம் எங்க உருப்பட போற... என்று வகுப்பறையில் தன்னை தாக்கிய ஆசிரியரை 4 வருடம் கழித்து காத்திருந்து மாணவன் தாக்கிய காட்சிகள் தான் இவை..!
பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்குளம் பிரிவில் உள்ள ஜோசப் மெட்ரிக்குலேசன் என்ற தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் வாஞ்சிநாதன். இவரிடம் பெரம்பலூர் டவுன் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாண்டியன் என்பவரின் மகன் ஜேம்ஸ் பாண்டி என்பவர் 2019 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு படித்துள்ளார். படிப்பில் சுமாரான ஜேம்ஸ் பாண்டியை, ஆசிரியர் வாஞ்சி நாதன் வகுப்பறையில் வைத்து கடுமையாக திட்டி தாக்கியதாக கூறப்படுகின்றது.
ஜேம்ஸ் பாண்டி தேறமாட்டான் என்று நினைத்திருந்த நிலையில் கொரோனாவால் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அவர் அடுத்தடுத்த வகுப்புகளிலும் கொரோனா புண்ணியத்தில் தேர்ச்சி பெற்று கல்லூரி ஒன்றில் படித்து வருவதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் ஆசிரியர் வாஞ்சி நாதன் வழக்கமாக பேருந்து ஏறுவதற்காக நிற்கும் பகுதியில் காத்திருந்த ஜேம்ஸ் பாண்டி , பள்ளி முடிந்து வந்த அவரிடம் நலம் விசாரிப்பது போல பேச்சுக் கொடுத்து, தான் தற்போது கல்லூரியில் படிப்பதாக கூறி கடுப்பேற்றி உள்ளார்.
தொடர்ந்து ஆசிரியரை ஆபாசமாக திட்டியதால், அவர், ராஸ்கல் என்ன செய்கிறேன் பார் என்று கையை உயர்த்திக் கொண்டு ஜேம்ஸ் பாண்டியை நெருங்க ,சட்டைக்கையை ஏற்றி விட்ட ஜேம்ஸ் பாண்டி அடுத்தடுத்து அவரை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது
அடித்த அடியில் பொறி கலங்கிய ஆசிரியர் உனது தந்தையிடம் புகார் செய்கிறேன் என்று கூறிய வாறு அங்கிருந்து செல்ல முயன்றதாக கூறப்படுகின்றது. ஆவேசம் குறையாத ஜேம்ஸ் பாண்டி அவரை விரட்டி விரட்டி பாக்ஸர் போல தாக்கினான்
பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியரை அடிப்பது பெற்ற தாய் தந்தையை தாக்குவது போன்று என்ற எந்த குற்ற உணர்ச்சியும், இல்லாமல் அவன் தாக்கியதை தடுக்க எவரும் முன்வரவில்லை
இது குறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் காவல் துணைக் காவல் கண்காணிப்பாளர் பழனிச்சாமியின் உத்தரவுப்படி ஜேம்ஸ் பாண்டியை கைது செய்து விசாரித்தனர். தன்னை வகுப்பறையில் வைத்து அடித்து அசிங்கப்படுத்தியதற்கு பழிக்குபழியாக தாக்கியதாக வாக்குமூலம் கூறி இருப்பதாக தெரிவித்த போலீசார் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.
Comments