110 கி.மீ அதிவேகத்தால் விபரீதம்.. 18 வயது இளைஞர் ஓட்டிய கார்.. கணவனை இழந்து பெண் கண்ணீர்..!
சென்னையில் தந்தையின் காரை எடுத்துக் கொண்டு கூட்டாளிகளுடன் ஊர் சுற்றிய இளைஞர் ஒருவரின் தறிகெட்ட வேகத்தால், அடித்து தூக்கி வீசப்பட்ட காய்கறி வியாபரி பரிதாபமாக பலியானார். இளைஞர்களின் வீக்கெண்டு கொண்டாட்டத்தால், ஒரு குடும்பமே நிற்கதியாய் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது...
எல்லாம் முடிஞ்சி போச்சே என்று கணவரை பறிகொடுத்த விரக்தியில் கதறி அழும் மனைவி..!
110 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து அண்ணன அடிச்சி தூக்கிடானுங்க.... என்று கதறும் சகோதரர் ...!
ஓட்டுனர் உரிமம் இல்லாமல் காரை அதிவேகமாக ஓட்டிச்சென்று உயிரிழப்பு ஏற்பட காரணமாக இருந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்ததும், காயம் அடைந்ததாக கூறி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்று படுத்துக் கொண்ட இளைஞர் ஸ்ரீஷிவ்விக்ரம் இவர் தான்..!
சென்னை கீழ்ப்பாக்கம் மண்டபம் சாலையை சேர்ந்த 45 வயதான திருமுருகன், தனது வீட்டின் அருகே கடை வைத்து காய்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். தனது மனைவி கடையை கவனித்து கொள்ள, குடும்ப சூழல் காரணமாக பகுதி நேரமாக கிடைக்கும் வேலைகளையும் திருமுருகன் செய்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை வழக்கம் போல காய்கறி வாங்குவதற்காக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றார்.
கீழ்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி அருகே சென்ற போது அந்த வழியாக அதிவேகத்தில் வந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதி, கட்டுப்பாட்டை இழந்து பச்சையப்பன் கல்லூரி சுற்றுச்சுவரில் இடித்து நின்றது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற திருமுருகன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உயிரிழந்த திருமுருகன் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் காரை அதிவேகத்தில் ஓட்டி வந்த 18 வயது இளைஞரான நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ஸ்ரீஷிவ்விக்ரம் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், ஸ்ரீஷிவ் விக்ரம் +2 வகுப்பு முடித்துவிட்டு கல்லூரியில் தற்போது தான் சேர்ந்திருப்பதும், கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வரும் அவரது தந்தை நரேன், ஊருக்கு சென்ற நேரத்தில் ஜாலியாக வீக்கெண்ட் ரைடு சென்று வரலாம் என்று கூட்டாளிகளை அழைத்துச்சென்றதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் இருந்து தனது நண்பர்கள் மூன்று பேருடன் ஸ்ரீ ஷிவ் விக்ரம் அமைந்தகரை நோக்கி காரில் சென்ற போது காரை 100 கிலோ மீட்டர் வேகத்துக்கும் மேலாக இயக்கியதாக கூறப்படுகின்றது. ஒரு கட்டத்தில் வேகத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார், திருமுருகனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து நிகழ்ந்ததாகவும் போலீசார் கூறினர்.
ஸ்ரீ ஷிவ் விக்ரமிடம் தற்போது ஓட்டுனர் உரிமம் இல்லையென்றும், தற்போது LLR எனப்படும் பழகுநர் சான்றிதழ் மட்டுமே வைத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே ஸ்ரீஷிவ் விக்ரமுக்கு உள் காயங்கள் இருப்பதாக கூறிய அவரது வழக்கறிஞர்கள், அவரை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். காரில் பயணித்த அவரது நண்பர்கள் மூன்று பேருக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
இதற்கிடையே குடும்ப பாரத்தை சுமந்து இரவு பகல் பாராமல் உழைத்து தனது கணவரை இழந்ததால் அவரது மனைவி தனது 10 வயது மகனோடு கதறி அழுத காட்சிகள் காண்போரை கலங்க செய்தது.
Comments