ஆறு மாத புள்ள வயிற்றில்... கர்ப்பிணி காவலர் முன் கணவர் பலியான சோகம்.... மரக்கிளையால் பறிபோன உயிர்...!

0 3472

சென்னையில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் கர்ப்பிணி மனைவியை இரு சக்கர வாகனத்தில் மருத்துவ பரிசோதனைக்கு கூட்டிச்சென்ற L&T நிறுவன ஊழியர் பரிதாபமாக பலியானார். காதலித்து திருமணம் செய்த பெண் காவலர் கணவரை இழந்து தவிக்கும் பரிதாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி...

மரக்கிளை விழுந்ததால் பலத்த காயம் அடைந்த பெண் காவலரின் கணவரை மீட்டு சிகிச்சைக்காக தூக்கிச்செல்லும் காட்சிகள் தான் இவை..!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுக்கா பூவனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ்.பிஇ பட்டதாரியான இவர் சென்னையில் L&T நிறுவனத்தில் டிசைனராக பணியாற்றி வந்தார். இவர் சுகப்பிரியா என்ற காவலரை காதலித்து கடந்த 2022 நவம்பர் 20 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் சுகப்பிரியா சென்னை கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவலராக பணியாற்றி வருகிறார். இவர்கள் கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர்.

காவலர் சுகப்பிரியா ஆறு மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், கடந்த 13ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் கீழ்பாக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
வேப்பேரி ஈவெரா சாலையில் சென்றபோது சாலையோரத்தில் இருந்த மரத்தின் கிளை ஒன்று முறிந்து அவர்கள் மீது விழுந்தது இதில் ஆனந்தராஜுக்கு கழுத்து எலும்பு மற்றும் இடது கை எலும்பில் முறிவு ஏற்பட்டது.
காவலர் சுகப்பிரியாவுக்கு முகத்தில் லேசான காயம் ஏற்பட்டது.

பலத்த காயம் அடைந்த ஆனந்தராஜுக்கு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. செயற்கை சுவாசத்தில் இருந்த ஆனந்தராஜ் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

திருமணமான ஏழே மாதத்தில் மரக்கிளை விழுந்து பெண் காவலரின் கணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments