கொடிக்கம்பம் மீது கைவைத்தால்.. தாசில்தாரை மிரட்டிய விசிக மாவட்ட செயலாளர்! தலைமறைவாகி தூது அனுப்பும் மா.செ

0 2472

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உரிய அனுமதியின்றி அமைத்த கட்சிக் கொடிக்கம்பத்தை அகற்ற உத்தரவிட்ட பெண் தாசில்தாருக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்து தலைமறைவான விசிக மாவட்ட செயலாளரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள அ.வாசதேவனூர் பேருந்து நிறுத்தம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நட்ட கொடிக் கம்பத்திற்கு உரிய அனுமதி பெறவில்லையென கூறப்படுகிறது. தகவலறிந்த சின்னசேலம் வட்டாட்சியர் இந்திரா, காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினருடன் அங்குச் சென்று கொடிக்கம்பத்தை அகற்ற உத்தரவிட்டார்.

இதற்கு விசிகவினர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், இங்கு வந்த மாவட்டச் செயலாளர் தனபால் என்ற தமிழ்மாறன், வட்டாட்சியர் இந்திராவை கடுமையாக திட்டியதுடன் "நீ அன்ஃபிட் ஆள், போய் பெரிய அதிகாரியை வரச்சொல்" எனக் கூறியதுடன் போலீஸார் முன்னிலையிலேயே கொலை மிரட்டலும் விடுத்ததாக தெரிகிறது.

வேறுவழியின்றி அங்கிருந்துச் சென்ற வட்டாட்சியர் இந்திரா இதுகுறித்து சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கொலைமிரட்டல், பெண் கொடுமை தடுப்பு உள்ளிட்ட 4 பிரிவுகளின் மீது தனபால் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதற்கிடையில், பேருந்து நிறுத்தத்தில் நடப்பட்ட கொடிக்கம்பத்தில் தொல்.திருமாவளவனை வரவழைத்து விசிகவினர் கொடியையும் ஏற்ற வைத்தனர். அவர் கொடியேற்றி முடித்த பின்னர் இரவோடு இரவாக அந்த கொடி கம்பத்தை வருவாய் துறையினர் அகற்றினர். தாசில்தாரின் புகாரை அடுத்து தலைமறைவாக இருந்துக் கொண்டு சமாதான தூது அனுப்பி வரும் தனபாலை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments