தண்ணீருக்குள் கான்கிரீட் கொட்டி மழை நீர் வடிகால்.... பலே காண்டிராக்டர் பலே... தூங்கி வழியும் அதிகாரிகள்..!

0 1593

ஏற்கனவே நல்ல நிலையில் இருந்த மழை நீர்வடிகாலை இடித்து அகற்றிவிட்டு புதிதாக 2 அடி தண்ணீரில் கான்கிரீட் கொட்டப்பட்டு தரமற்ற முறையில் மழை நீர் வடிகால் அமைத்த கூத்து சென்னை மாநகராட்சியின் 16 வது வார்டுக்குட்பட்ட மணலிபுது நகரில் அரங்கேறி உள்ளது.

2 அடிக்கு தேங்கி நிற்கும் தண்ணீரில் கான்கிரீட்டை கொட்டி விஞ்ஞான முறையில் மழை நீர் வடிகால் அமைக்கும் இந்த பணி நடை பெற்ற இடம், சென்னை மாநகராட்சியின் 16 வது வார்டுக்குட்பட்ட மணலிபுது நகர்..!

கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட மழை நீர் வடிகாலை இடித்து அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிதாக மழை நீர்வடிகால் அமைக்கும் பணிக்கு ஒப்பந்தம் எடுத்துள்ள கே.பி.பி. என்ற ஒப்பந்த நிறுவனம் தரமற்ற முறையில் மழை நீர் வடிகால் பணியை மேற்கொண்டு வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டிய நிலையில் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது அங்கு கான்கிரீட் கலவையை மழை நீருக்குள் கொட்டிக் கொண்டிருந்தனர்.

தண்ணீருக்குள் கான்கிரீட் கொட்டுவது சரியா ? இப்படி கட்டினால் மழை நீர் கால்வாய் எப்படி பலமாக இருக்கும் ? மக்கள் வரிப்பணம் வீணாகாதா ? என்று கேள்வி எழுப்பியதும் தங்கள் பணியை நிறுத்தி விட்டு திரு திருவென விழித்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த ஒப்பந்த நிறுவனத்தின் கண்காணிப்பாளர், தனக்கு ஒன்றுமே தெரியாதது போல தொழிலாளர்களை கடிந்து கொண்டார்.

உங்கள் வீடுகளை இது போல் தண்ணீரில் கான்கிரீட் கொட்டி கட்டுவீர்களா ? என்று கேள்வி எழுப்பியதும் தண்ணீரை உரிஞ்ச மோட்டார் வைத்திருப்பதாகவும், மோட்டாரில் டீசல் இல்லை என்றும் காரணம் கூறி சமாளித்தார் கே.பி.பி. நிறுவன ஒப்பந்த கண்காணிப்பாளர்...

விசாரித்த போது கே.பி.பி. நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து அதனை சவுமியா என்ற நிறுவனத்துக்கு துணை ஒப்பந்தமாக வழங்கி உள்ளதாகவும், அவர்கள் தான் தற்போது பணி செய்து வருவதாகவும் கூறப்படுகின்றது. இதனை பார்வையிட்டு ஒழுங்குப்படுத்த வேண்டிய, 16 வது வார்டு கவுன்சிலரோ, மாநகராட்சி அதிகாரிகளோ அங்கு இல்லை. யாரும் கண்டு கொள்ளாத நிலையில் செய்தியாளர் வீடியோ பதிவு செய்ததால், தரமற்ற முறையில் நடந்த இந்த மழை நீர் வடிகால் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர மாநகராட்சி அதிகாரிகள் இந்த மழை நீர் வடிகால் பணிகளை முழுமையாக ஆய்வு செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. தகவல் அறிந்து இது குறித்து பேசிய 16 வது வார்டு கவுன்சிலர் ராஜேந்திரன் தான் சொந்த ஊரான மதுரைக்கு சென்றிருப்பதாகவும், உடனடியாக மழை நீர் வடிகால் பணியை நிறுத்த சொல்வதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments