பூட்டை உடைக்காமலேயே வீட்டிற்குள் சென்று பணத்தை திருடிய பக்கத்து வீட்டுக்காரர் கைது..!

சென்னை ராமாபுரத்தில் பக்கத்து வீட்டின் பூட்டை உடைக்காமல் கதவை மட்டும் லாவகமாக திறந்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை, வீட்டு உரிமையாளர் சாமர்த்தியமாக மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளார்.
அன்னை சத்யா நகரைச் சேர்ந்த நல்லசிவம் என்பவர், வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்தோடு வெளியில் செல்லும்போதெல்லாம் பூட்டு உடைக்கப்படாமல் பீரோவிலிருந்த பணம் திருடு போயுள்ளது.
3 முறை இதேபோல் நிகழ்ந்த நிலையில், நல்லசிவமும் அவரது மனைவியுமே ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் அடைந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இருவருமே பணத்தை எடுக்கவில்லை என்பதை புரிந்துகொண்டு, திருடனைப் பிடிக்க திட்டம் போட்டனர். அதன்படி நல்லசிவம் வீட்டுக்குள் இருந்துகொண்டு அவரது மனைவி வீட்டைப் பூட்டிச் சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், தளர்வாக இருந்த கதவை முன்னும் பின்னுமாக தள்ளி லாவகமாக திறந்து வீட்டுக்குள் சென்றுள்ளார். அங்கு மறைந்திருந்த நல்லசிவம், அவனை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளார்.
இளநீர் வியாபாரம் செய்துவரும் மணிகண்டன், செல்போன் வாங்கவும் மது அருந்தி உல்லாசமாக சுற்றவும் திருடியதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
Comments