உ.பி.யில் பயங்கரம்... தாதா அதிக் சுட்டுக்கொலை.. 3 இளைஞர்கள் வெறிச்செயல்..!
உத்தரப் பிரதேசத்தில், முன்னாள் எம்.பி.யும் பிரபல தாதாவுமான அதிக் அகமது, அவரது சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டு கைவிலங்கிடப்பட்ட நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது 3 இளைஞர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்தவர் அதிக் அகமது. முன்னாள் எம்.பியும், பிரபல தாதாவுவான இவர் மீது கொலை உள்ளிட்ட 100 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
2005ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏவான ராஜூபால் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிக் அகமது உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இவ்வழக்கின் முக்கிய சாட்சியான வக்கீல் உமேஷ் பால் என்பவர் கடந்த பிப்ரவரி சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக அதிக் அகமது மற்றும் அவரது மகன் ஆசாத், கூட்டாளி குலாம் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
இரண்டு நாட்களுக்கு முன் ஆசாத், குலாம் ஆகியோர் போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில், அதிக் அகமது அவருடைய சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோரைக் கைது செய்த போலீசார், நேற்று இரவு மருத்துவப் பரிசோதனைக்காக கைவிலங்கிட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது இருவரும் செய்தியாளர்களிடம் பேச முயன்ற போது, கூட்டத்தில் இருந்து மூன்று பேர் மிகவும் நெருக்கத்தில் துப்பாக்கியால் சுட்டனர். குண்டு பாய்ந்த நிலையில் அதிக் மற்றும் அஷ்ரப் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டில் செய்தியாளர்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டது.
துப்பாக்கியால் சுட்ட மூன்று இளைஞர்களை போலீசார் சுற்றிவளைத்ததால் அவர்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரண் அடைந்தனர்.
துப்பாக்கியால் சுட்டவர்கள் செய்தியாளர்கள் போல காட்டிக் கொண்டு அவர்களுடன் ஊடுருவி இந்த தாக்குதலை அரங்கேற்றி உள்ளனர். இந்த சம்பவத்திற்கு முன்விரோதம் காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தாதாக்களை அழைத்துச் சென்றபோது பணியில் இருந்த 17 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே காவல் துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவசர ஆலோசனை மேற்கொண்டார். வன்முறைச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உத்தரப் பிரதேசம் முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சர் யோகி வீட்டுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Comments