அரசுப் பேருந்தில் பயணித்த பெண் காவலரிடம் பாலியல் சீண்டல்.. ஓய்வு பெற்ற இராணுவ வீரர் கைது..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் பேருந்தில் பயணித்த பெண் காவலரிடம் சீண்டலில் ஈடுபட்டதாக ஓய்வுபெற்ற ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
செவ்வாய்கிழமை இரவு கோவையிலிருந்து உதகை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் கோத்தகிரியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் தருமன் பயணித்துள்ளார்.
இவரது முன்னிருக்கையில் பெண் காவலர் ஒருவர் பயணித்துள்ளார். தருமன் அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிலையில், சிறிது நேரம் பொறுமை காத்த பெண் காவலர், ஒரு கட்டத்தில் தருமனிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், ஓரிடத்தில் பேருந்தில் இறங்கிய தருமன், பின்னால் வந்த மற்றொரு பேருந்தில் ஏறி தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
ஆனால் அவரை விடாமல் பின் தொடர்ந்து அதே பேருந்தில் ஏறிய பெண் காவலர், சக போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த போலீசார் தருமனை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கும் போலீசாரிடம் அவர் வாக்குவாதம் செய்தார்.
தருமன் தாக்கியதில் பெண் காவலருக்கு காதில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தருமனிடம் நடத்திய விசாரணைக்குப் பின் அவர் மீது ‘பெண் காவலரை தாக்கியது, தீய சொற்களை பயன்படுத்தியது, காவலரை பணி செய்ய விடாமல் தடுத்தது’ உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
Comments