லாரி மீது பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து: திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞர் பலி!

காஞ்சிபுரத்தில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற லாரியின் மீது பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதியதில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த இளைஞர் உயிரிழந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சிறுவஞ்சிப்பட்டு பகுதியை சேர்ந்த போட்டோகிராபர் மோகன்ராஜ் என்பவர், சென்னை திருவேற்காடு வேலை செய்து வந்த நிலையில், அப்பகுதியில் வசிக்கும் பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இவர்களின் காதலுக்கு, பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அவர்களிடம் பேசி ஒப்புக்கொள்ள வைத்து ஏப்ரல் 26 அன்று திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், மோகன்ராஜ் சென்னை, திருவேற்காட்டில் வசிக்கும் பெண்ணின் வீட்டிற்கு வந்து, ராணிப்பேட்டைக்கு திரும்பி சென்றுள்ளார்.
தாமல் அருகே சாலையில் முதியவர் ஒருவர் சாலை விபத்தில் இறந்ததையடுத்து அப்பகுதியில் பாலுசெட்டி போலீசார் விசாரணை நடத்தியதால் அங்கு கூட்டமாக இருந்துள்ளது.
அப்போது ராணிப்பேட்டை நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த லாரியின் ஓட்டுநர், கூட்டத்தை பார்த்து திடீரென பிரேக் அடித்து நின்றதையடுத்து, பின்னால் வந்த மோகன்ராஜ் லாரியின் பின்பக்கத்தில் மோதியுள்ளார். உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
Comments