தோழியை நாசம் செய்த மந்திரவாதிக்கு ‘கஜக்’ காதலன் கொடுத்த தண்டனை..! தர்மபுரியில் ஒரு தரமான சம்பவம்

0 4687

தர்மபுரி அருகே வசிய சக்தி மூலம் தோழியை காதலியாக மாற்றித்தருவதாக கூறி, காதலனை ஏமாற்றி இளம் பெண்ணை பலாத்காரம் செய்த மந்திரவாதி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது காதலி மீது கைவைத்த மந்திரவாதிக்கு நந்தா பட பாணியில் தண்டனை அளித்த காதலன் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், மாரண்டஅள்ளியைச் சேர்ந்தவர் சசிக்குமார். ஓசூர் அசோக் லேலண்ட் கம்பெனியில் பணிபுரிந்து வந்த சசிக்குமார் மாந்த்ரீக வேலைகளையும் செய்துவந்ததாக கூறப்படுகிறது. கடந்த இரு தினங்களாக அவர் மாயமான நிலையில் பெண்ணாகரம் வனப்பகுதியில் தலை நசுக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

காவல்துறையினரின் விசாரணையில் கடைசியாக சசிக்குமார், அவருடன் பணிபுரியும் நண்பர் கோவிந்தராஜ் என்பவரது 28 வயது மகன் தினேசுடன் வெளியே சென்றது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரிக்க முயன்ற நிலையில் தலைமறைவான தினேஷ் தனது கூட்டாளி குணாளனுடன், தங்களை போலீசார் தேடுவதாக கூறி நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சசிகுமார் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது.

தினேஷ் தன்னுடன் தோழியாக பழகிய பெண் ஒருவரை தீவிரமாக காதலித்துள்ளார். அந்தப்பெண்ணோ நட்பாக மட்டுமே பழகி வருவதாக கூறியதால் அவரை வசியம் செய்வதற்காக மந்திரவாதி சசிக்குமாரை அணுகி உள்ளார். எப்படியாவது அந்தப்பெண்ணை அழைத்து வா நான் வசிய பூஜை செய்து காதலிக்க வைக்கிறேன் என்று சசிகுமார் கூறி உள்ளார்.

இதனை உண்மை என்று நம்பி தனது தோழியை மந்திரவாதி அழைத்துவர சொன்ன தனிமையான பகுதிக்கு குலதெய்வ பூஜை என்று அழைத்துச்சென்றார் தினேஷ். மாந்திரீகம் செய்யும் பொழுது அந்தப் பெண்ணின் காதலன் ஒரு கிலோமீட்டர் தூரம் தள்ளி இருந்தால் தான் வசிய பூஜை பலிக்கும் என்று கூறி தினேஷை வெளியே அனுப்பி உள்ளார் மந்திரவாதி சசிகுமார்.

தினேஷும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக சில மணி நேரம் காத்திருந்துவிட்டு, பூஜை நடந்த இடத்துக்கு திரும்பி உள்ளார். மந்திரவாதி சசிகுமாரிடம் இருந்து வெளியே அழுதபடி வந்த இளம் பெண்ணோ, தன்னை அந்த மந்திரவாதி பலாத்காரம் செய்ததாகவும், இதுகுறித்து வெளியே சொன்னால் சூனியம் வைத்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறி கதறி அழுதுள்ளார்.

சூனியத்துக்கு பயத்து போலீசுக்கு செல்லாத தினேஷ், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மந்திரவாதிக்கு தக்க பாடம் புகட்ட முடிவு செய்தார். அதன்படி கடந்த 4 ந்தேதி தனது கூட்டாளியின் காதலியை வசியத்தால் சேர்த்து வைக்க வேண்டும் என்று சசிகுமாரை தொடர்பு கொண்டு கூறி உள்ளார்.

அடுத்ததாக தன்னிடம் ஒரு பெண் சிக்க போகிறது என்ற ஆசையில் பெண்ணாகரம் வனப்பகுதிக்கு அந்த பெண்ணை அழைத்து வரசொல்லி இருக்கிறார் சசிக்குமார். ஆனால் அங்கு தனது கூட்டாளிகளுடன் சென்ற தினேஷ், அந்தப்பெண் வந்து கொண்டிருப்பதாக கூறி அதுவரை மது அருந்தலாம் என்று கூறி உள்ளார். கரும்பு திங்க கூலியா என்று ஓசியாக கொடுத்த மதுவை மூக்கு முட்ட குடித்துள்ளார் மந்திரவாதி சசிக்குமார்.

போதையில் தள்ளாடிய மந்திரவாதியை தாக்கி ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கிய தினேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள், நந்தா பட பாணியில் அவரது அந்த இடத்தை அறுத்து வீசி உள்ளார்.

அதன் பின்னும் கோபம் அடங்காமல் அவரை கல்லால் தாக்கி தலையை நசுக்கி கொலை செய்துவிட்டு தலைமறைவானது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தினேஷ், குணாளன் போலீசில் சிக்கி உள்ள நிலையில் தொடர்புடைய தினேஷின் மற்றொரு கூட்டாளியை போலீசார் தேடிவருகின்றனர்.

மாந்த்ரீகத்தை நம்பிய மூடத்தனத்தால் தோழியின் வாழ்க்கை சீரழிந்ததோடு, மந்திரவாதியின் கொலை வழக்கிலும் சிக்கி தினேஷ் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments