நீச்சல் தெரியாமல் குளத்தில் அடுத்தடுத்து மூழ்கிய 10 பேர்.. 5 பேர் பலியானது எப்படி ? வெளியானது அதிர்ச்சி வீடியோ

0 3567

சென்னை பழவந்தாங்கல் அடுத்த மூவரசம் பட்டு குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் நீரில் மூழ்கி 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நீச்சல் தெரியாத ஒருவரின் கால் சகதியில் சிக்கியதால் அவரை காப்பாற்ற சென்றவர்கள் அடுத்தடுத்து நீரில் மூழ்கி பலியான பரிதாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் பங்குனி மாத தீர்த்தவாரி பூஜை புதன்கிழமை காலை மூவரசம்பட்டு குளத்தில் நடந்தது. இந்த பூஜைக்காக சூலத்துடன் குருக்கள் மற்றும் பக்தர்கள் குளத்திற்குள் இறங்கினர்

குருக்கள் 5 பேர் சூழத்துடன் நிற்க, அவர்களை சுற்றி 25க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒருவர் கையை ஒருவர் கோர்த்தபடி மார்பளவு தண்ணீரில் கடைசி படியில் நின்றதாக கூறப்படுகின்றது.

குருக்கள் சூலத்துடன் நீருக்குள் மூழ்கி எழுந்த உடன் சுற்றி நின்றவர்களும் தண்ணீரில் மூழ்கினர் . அபோது சிலர் கைகளை விட்டு மூழ்கி எழுந்தனர். இதில் நீச்சல் தெரியாத ஒருவர் சற்று பின்னோக்கிச்சென்று படியில் இருந்து இறங்கி சகதியில் கால் சிக்கியதால் தண்ணீருக்குள் இருந்து வெளியே வர இயலாமல் தத்தளித்தார்

அவரை காப்பாற்றுவதற்காக இருவர் கையை நீட்ட, மூழ்கிய நபர் இருவரின் இடுப்பு வேட்டியை பிடித்து இழுத்ததால் அவர்களும் நீரில் மூழ்கியதாகவும், இப்படி நீச்சல் தெரியாத நிலையிலும் கைகொடுத்து காப்பாற்ற முயன்றதால் 10 பேர் வரை அடுத்தடுத்து நீரில் மூழ்கியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்

கரையில் இருந்து அந்த விபரீதத்தை கண்ட வெங்கடேசன் மற்றும் கடைக்காரர் சதீஷ் ஆகிய இருவரும் குளத்தில் குதித்து 5 பேர் வரை இழுத்து கரைக்கு கொண்டு வந்து காப்பாற்றினர்.

மற்றவர்களை மீட்க இயலாததால் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து நீரில் மூழ்கி சகதிக்குள் சிக்கி இருந்த 5 பேரது சடலங்களை மீட்டனர்

இந்த விபரீத சம்பவத்தில் சென்னை பல்கலைகழக மாணவர் ராகவ், சாட்டர்டு அக்கவுண்ட் படித்து வந்த ராகவன், வணேஷ் , நிசான் நிறுவன பொறியாளர் யோகேஸ்வரன், கேட்டரிங் தொழில் செய்து வந்த சூர்யா உள்ளிட்ட 5 பேர் பரிதாபமாக பலியானதாக கவல்துறையினர் தெரிவித்தனர்.

மூவரசம் பட்டு குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்துவது குறித்து காவல்துறையினருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் முறையான அறிவிப்பு அளிக்காமல் செய்ததால் பாதுகாப்பு முன்னேற்பாடு ஏதுவும் செய்யவில்லை எனக் கூறப்படுகின்றது. அதே நேரத்தில் குளத்திற்குள் இறங்கிய பெரும்பாலானவர்களுக்கு நீச்சல் தெரியாது என்பதால் அவர்களை மீட்க இயலவில்லை என்றும் வெங்கடேசனும், சதீஷ்குமாரும் குளத்திற்குள் குதித்து காப்பாற்றவில்லையென்றால் உயிரிழப்பு அதிகமாயிருக்கும் என்று கூறப்படுகின்றது.

சம்பவ இடத்தை பார்வையிட்ட பெருநகர சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இனிவரும் காலங்களில் இது போன்ற அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க மூவரசம்பட்டு குளம் அமைந்துள்ள பகுதியில் உரிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்

கூடுமானவரை நீச்சல் தெரியாதவர்கள் நீர்நிலைகளில் இறங்குவதை தவிர்ப்பது நல்லது என்று காவல்துறையினர் எச்சரிக்கின்றனர்.

கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தான் 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த குளத்தை 20 அடிக்கு ஆழப்படுத்தி அதனை சுற்றி மின்விளக்குகளுடன் கூடிய நடைபாதை வசதி அமைத்துக் கொடுத்தது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments