பழனி படிக்கட்டு போல கட்டுமஸ்தான உடலுக்கு ஊசி செலுத்திய மாஸ்டர் பலி..! அதிகப்படியான ஸ்டீராய்டால் விபரீதம்

0 2131

ஆவடி அருகே நெமிலிச்சேரியில் ஆணழகன் போட்டிக்காக ஜிம்மில் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்ட ஜிம் மாஸ்டர் ரத்த வாந்தி எடுத்து உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உடல் கட்டுமஸ்தாக இருக்க அதிகப்படியான ஸ்டீராய்டு ஊசி செலுத்திக் கொண்டதால் இரண்டு கிட்னியும் செயலிழந்ததால்  நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.

உடலில் பழனி படிக்கட்டுக்கள் போல சிக்ஸ் பேக் வைக்கவும்... இரண்டு கைகளையும் உருண்டு திரண்ட ரெக்கையை போல மாற்றுவதற்காகவும்... ஜிம்மில் அதிதீவிர பயிற்சி மேற்கொண்டதால் விபரீதமாக உயிரிழந்த ஜிம் மாஸ்டர் ஆகாஷ் இவர்தான்..!

ஆவடி அடுத்த நெமிலிச்சேரியை சேர்ந்தவர் சபரி முத்து என்கின்ற ஆகாஷ் 25 வயதான இவர் நடுகுத்தகை பகுதியில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். ஆகாஷ் மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு உடல் அழகை காண்பித்து வெற்றிப்பெற்றுள்ளார்.

மாநில அளவிலான போட்டியில் பங்குபெற்று வெற்றிப் பெற வேண்டும் என கடுமையாக பயிற்சி செய்து வந்தார்.இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி உடற்பயிற்சியின் போது திடீரென ரத்த வாந்தி எடுத்த ஆகாஷை மீட்டு பூந்தமல்லி அடுத்துள்ள சவிதா தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் 5 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த ஆகாஷ் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்கிழமை உயிர் இழந்தார். 26 ஆம் தேதி நடைபெற்ற ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிப்பெற கடுமையாக உடற்பயிற்சி செய்ததுடன் கட்டுடல் கொண்டு வர அளவுக்கதிகமாக 100 சதவீதம் அளவுக்கு அதிகமாக ஸ்டீராய்டு ஊசி செலுத்தியதால் ஆகாஷின் இரண்டு கிட்னியும் செயல் இழந்து ஆகாஷ் உயிரிழந்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக உடற்பயிற்சிக்கூட உரிமையாளர் கூறினார்.

உடற்பயிற்சி பயிற்சியாளர் திடீரென உயிரிழந்த சம்பவம் அவரது நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments