காணாமல் போன இளைஞர்.. கண்மாயில் சடலமாக மீட்பு.. முறை தவறிய உறவால் நிகழ்ந்த கொலை..!

0 3311

மதுரையில், கடந்த 14ம் தேதி காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த இளைஞர் கொலை செய்யப்பட்டு கண்மாயில் புதைக்கப்பட்டது தெரிய வந்த நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை, ஜெய்ஹிந்த்புரம் அடுத்த மீனாம்பிகை நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சரவணமருது. கூலி வேலைக்காக, கடந்த 2 வருடத்திற்கு முன்பு சிவகங்கை மாவட்டம் கண்டாங்கிபட்டிக்குச் சென்ற இடத்தில் அங்கு சக்திவேல் மனைவி மாலதி உடன் திருமணம் கடந்த தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது மாலதியின் கணவர் சக்திவேலுக்கு தெரிய வர இருவரையும் கண்டித்துள்ளார். அதையும் மீறி இருவரும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தனிமையில் சந்தித்துள்ளனர்.

இதனால் மனம் உடைந்த சக்திவேல் தனது நண்பர்களான திருவாதவூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்த ராஜபிரபு, முருகன் ஆகியோரிடம் மனைவியின் கள்ளத்தொடர்பு குறித்து கூறியுள்ளார். அவர்கள் சரவணமருதுவை தீர்த்து கட்ட ஐடியா வழங்கியதால், அதன்படி, சக்திவேல் மனைவிக்கு தெரியாமல் அவரது செல்போனை எடுத்து வந்து கள்ளக்காதலன் சரவணமருதுவை திருவாதவூர் சமத்துவபுரத்துக்கு வருமாறு குறுஞ்செய்தி அனுப்பி அழைத்துள்ளார்.

மாலதி தான் அழைக்கிறாள் என்று நினைத்து அவருக்கு பிடித்த பழங்கள் மல்லிகைப்பூ சகிதங்களுடன் சமத்துவபுரத்திற்கு வந்த சரவணமருதுவிற்கு, அங்கு சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் ராஜபிரபு, முருகன் ஆகியோர் நின்றுக் கொண்டிருந்தது அதிர்ச்சியை அளித்தது. எனவே, தப்பியோட முயன்றவரை பிடித்து, மாலதி அழைத்தால் உடனே வந்து விடுவாயா? என்று கேட்டவாறு மறைத்து வைத்திருத்த உருட்டுகட்டையால் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. சரவணமருது உயிரிழந்த நிலையில், உடலை சாக்கு மூட்டையில் கட்டி அருகிலுள்ள சுண்ணாம்பூர் கண்மாய்க்கு எடுத்துச் சென்று குழித்தோண்டி புதைத்து விட்டு சென்று விட்டனர்.

இந்நிலையில், வேலைக்கு சென்ற தனது மகன் சரவணமருது வீடு திரும்பவில்லை, போன் சுவிட்ச் ஆப்பில் இருக்கிறது என அவரது அம்மா ராஜேஸ்வரி கடந்த 14ம் தேதி ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசாருக்கு, சரவணமருது-மாலதி தொடர்பு தெரிய வரவே, சக்திவேலை பிடித்து விசாரணை செய்தபோது சரவணமருதுவை கொன்று கண்மாயில் புதைத்ததாக கூறினார்.

இதனையடுத்து சக்திவேல், கூட்டாளிகளான ராஜபிரபு, முருகன் ஆகியோரை கைது செய்த போலீசார் சுண்ணாம்பூர் கண்மாயில் புதைக்கப்பட்டிருந்த சடலத்தை மீட்டு அங்கேயே உடற்கூராய்வு செய்தனர். மனைவியுடன் தொடர்பில் இருந்தவரை கொலை செய்து கண்மாயில் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments