ஐஸ்வர்யாவின் பினாமி நான்... போலீஸை அதிர வைத்த ஈஸ்வரி.. தனுஷ் குடும்பத்தின் ‘டக்’ இது தான்..! கணக்கு வழக்கில்லாமல் கொட்டிக்கிடந்த ஐஸ்வர்யம்

0 178973

நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருடியதாக கைது செய்யப்பட்ட பெண் பணியாளர் தன்னை ஐஸ்வர்யாவின் பினாமி என்று கூறி கணவரை ஏமாற்றியது தெரியவந்தது.

திருடிய நகைகளை விற்று அதில் தனது மகளுக்கு மளிகைகடை வைத்துக்கொடுத்ததோடு, அங்கிருந்து தனுஷ் வீட்டிற்கு மாதந்தோறும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மளிகைபொருட்கள் சப்ளை செய்த கில்லாடி பெண் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.

நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருடியதாக பெண் பணியாளர் ஈஸ்வரி, ஓட்டுனர் வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஈஸ்வரியிடம் இருந்து 103 சவரன் நகை மற்றும் சுமார் 95 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நில பத்திரம், 30 கிராம் வைர நகைகள் 4 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

முன்னதாக ஈஸ்வரி மற்றும் அவரது கணவர் அங்கமுத்து ஆகியோரை பிடித்து எம்ஜிஆர் நகரில் வைத்து தனித்தனியாக விசாரணை மேற்கொண்ட போது பல சுவாரஸ்ய தகவல்கள் போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

குறிப்பாக கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மூலமாக மூத்த மகளுக்கு திருமணம் செய்து வைத்த ஈஸ்வரி, இரண்டாவது மகளுக்கு தொழில் தொடங்க மளிகைக்கடையையும் கணவர் அங்கமுத்துவிற்கு அதிக முதலீட்டுடன் கூடிய காய்கறி கடையும் வைத்துக் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். ஐஸ்வர்யாவிடம் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஈஸ்வரி, நடிகர் தனுஷ் வீட்டிற்கு மாதம் மளிகை காய்கறியை தனது மகள் மற்றும் கணவர் கடைகளில் இருந்து சுமார் 50 ஆயிரம் ரூபாய்க்கு சப்ளை செய்தது தெரியவந்துள்ளது.

திருடப்பட்ட நகைகள் தனுஷ் மற்றும் ஐஸ்வரியா திருமணத்தின் போது ரஜினிகாந்த் சீதனமாக கொடுத்த நகைகள் என்பதால் , பெரிய நிகழ்வுகளின் போது மட்டுமே அந்த நகைகளை அணிவதற்காக லாக்கரில் இருந்த நகைகளை பார்க்காமல் இருந்துள்ளார். திருமணத்திற்கு பிறகு மற்றும் நண்பர்கள் அன்பளிப்பாக அளித்த நகைகள் ஆகியவற்றையும் லாக்கரில் வைத்து இருந்ததால், எவ்வளவு நகைகள் இருந்தது என முறையாக கணக்கு தெரியாமல் இருந்துள்ளது. இதனால், புகாரில் தொலைந்து போன நகைகள் குறித்த முறையான தகவலை ஐஸ்வர்யா தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

சோழிங்கநல்லூரில் வீடு போன்றவை வாங்கும் போது இவ்வளவு பணம் ஏது என்று கணவன் கேட்டபோது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது பெயரில் பினாமியாக வாங்கியதாகவும் வெளி உலகத்திற்கு இது நமது வீடு எனவும்; உண்மையில் இந்த வீடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த்க்கு சொந்தமானது எனவும் கூறி கணவனின் வாயை அடைத்த ஈஸ்வரி, இது குறித்து யாரிடமும் வெளியில் சொல்லக்கூடாது எனவும் கூறியுள்ளார். இதனால் வீட்டில் இருந்தவர்களுக்கு சந்தேகம் இல்லாத வண்ணம் ஈஸ்வரி செயல்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஓட்டுனர் வெங்கடேஷிடம் கொடுத்து நகைகளை விற்பனை செய்ததில் 20 இலட்சம் ரூபாய் வந்ததாகவும், அதில் வெங்கடேசனின் பங்காக 9 லட்சம் ரூபாயை வாரி வழங்கிய ஈஸ்வரி, கணவன் பெயரில் 350 கிராம் தங்க நகைகளை வங்கியில் அடமானம் வைத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

புகாரில் இருப்பதைவிட அதிகப்படியான நகை பணம் கைப்பற்றப்பட்டதால் , எவ்வளவு நகைகள் கொள்ளையடித்துள்ளார்கள் என்பது குறித்தும். குறிப்பாக 18 வருடமாக வேலை பார்க்கும் ஈஸ்வரி மற்றும் சுமார் 10 வருடமாக ஓட்டுனராக பணிபுரியும் வெங்கடேசன் எவ்வாறு கூட்டு சேர்ந்து எத்தனை வருடம் நகைகளை திருடியுள்ளனர். எவ்வளவு நகை பணம் திருடியுள்ளனர்? இத்தனை வருட காலம் சந்தேகம் வராமல் திருடியது எப்படி என்பது குறித்து எல்லாம் விரிவாக விசாரணை நடத்த காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

ஐஸ்வர்யாவின் வீடு தவிர நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் வீடுகளிலும் நகை, பணத்தை ஈஸ்வரி மற்றும் வெங்கடேசன் திருடியுள்ளார்களா ? எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் ஐஸ்வர்யா நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் வீட்டில் நகைகள் மற்றும் பணம் வேறு ஏதேனும் மாயமாகியுள்ளதா? எவ்வளவு நகைகள் மாயமாகியுள்ளது என்பது குறித்தும் போலீசார் விளக்கம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஈஸ்வரி மீது ஏற்கனவே ஒரு வழக்கு இருப்பதாகவும் அது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கணக்கு வழக்கில்லாமல் கல்லாவில் பணமிருந்தால் எடுத்த கணக்கும் தெரியாது... கொடுத்த கணக்கும் தெரியாது என்பது போல 4 வருடங்களாக வீட்டு வேலைக்காரி கைவிட்டு எடுக்கும் அளவுக்கு ஐஸ்வர்யா வீட்டில் ஐஸ்வர்யம் கொட்டிக்கிடந்துள்ளது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments