பெண்களை இழுத்து போட்டு அடித்து உதைத்த திமுக கவுன்சிலர் கும்பல்..! போலீசாரின் மெத்தனத்தால் கொலை

0 4573

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பெண்களை சரமாரியாக தாக்கிய திமுக கவுன்சிலர் மற்றும் ஆதரவாளர்கள் மீது போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்காமல் விட்ட நிலையில், புகார் அளித்த பெண்ணின் உறவினர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆலாடு பகுதியில் வசித்து வருபவர் காயத்ரி, இவரது பூர்வீக வீட்டில் வாடகைக்கு குடியிருந்த உறவுக்கார பெண் நந்தினியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வீட்டை காலி செய்ய வைத்துள்ளார். வீட்டை காலி செய்த நந்தினி சாவியை வாங்கி வைத்துக் கொண்டார். சம்பவத்தன்று இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையின் போது நந்தினிக்கு ஆதரவாக பொன்னேரி 17வது வார்டு திமுக கவுன்சிலர் இளங்கோ, எர்ணாவூர் ஹரிஹரன் உள்ளிட்டோர் காயத்ரியையும், அவரது குடும்பத்தினரையும் சரமாரியாக தாக்கி தள்ளியதாக கூறப்படுகின்றது

இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்கியதால் அந்த பகுதியே போர்க்களமானது

வீட்டிற்கு வெளியே வைத்து தாக்கியதோடு , வீட்டிற்குள் செல்ல முயன்ற காயத்திரியையும் அவரது சகோதரி கீர்த்தியையும் நந்தினி மற்றும் இளங்கோவின் ஆதரவாளர்கள் அடித்ததால் அவர் உதவி கேட்டு அலறும் நிலை ஏற்பட்டது

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளுடன் பொன்னேரி போலீசில் காயத்திரி புகார் அளித்த நிலையில், போலீசார் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளாமல் சிவில் பிரச்சனை என்று கூறி அலைக்கழித்ததாக கூறப்படுகின்றது. இதற்கிடையே போலீசில் புகார் அளிக்க காயத்ரிக்கு பக்கபலமாக இருந்த உறவினர்களான ராபர்ட்,பாலமுருகன் ஆகியோரை, கவுன்சிலர் இளங்கோவின் ஆதரவளர்களான வினோத், திலீப்குமார் , ராஜ்கிரன் ஆகியோர் வாக்குவாதம் செய்து தாக்கியதாக கூறப்படுகின்றது.

இந்த தாக்குதலில் ராபர்ட் தப்பியோடிய நிலையில் கற்கலால் தாக்கப்பட்ட பாலமுருகன் சம்பவ இடத்திலேயே பலியானார்.தாக்குதல் சம்பவம் தொடர்பாக இரு தரப்பு புகாரின் பேரில் இரு வழக்குகளை பதிவு செய்த போலீசார், கொலை சம்பவம் தொடர்பாக வினோத்குமார், ராஜ்கிரண் ஆகிய இருவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள திலீப்குமாரை தேடி வருகின்றனர்.

அதே நேரத்தில் பெண்களை தாக்கிய சம்பவத்தில் ஆரம்பத்திலேயே கவுன்சிலர் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்திருந்தால் இந்த கொலை சம்பவம் நடந்திருக்காது என்று காயத்திரியின் உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments