ஒரே சாதியை சேர்ந்த இருவர் காதலித்தாலும் செல்லாது.. செல்லாது..! ஊரார் காலில் கும்பிட்டு விழ வைத்தனர்..!

0 2865
ஒரே சாதியை சேர்ந்த இருவர் காதலித்தாலும் செல்லாது.. செல்லாது..! ஊரார் காலில் கும்பிட்டு விழ வைத்தனர்..!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பொட்டலங்குடிகாடு கிராமத்தில் காதல் திருமணம் செய்து வைத்த குடும்பத்தினரையும், திருமணத்தில் பங்கேற்ற உறவினர்களையும் ஊரை விட்டு தள்ளி வைத்ததால், ஊரார் காலில் விழுந்து கும்பிட்டு அபராதம் கட்டிய கொடுமை அரங்கேறி உள்ளது....

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பொட்டலங்குடிகாடு கிராமத்தில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த  200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்தில் இளைஞர்கள் காதல் திருமணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது..

இந்த நிலையில் இந்த கிராமத்தை சேர்ந்த சுமன் என்ற 28 வயது இளைஞரும், திருப்பூரை சேர்ந்த அபிநயா என்ற பெண்ணும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இரு வரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பொருத்தம் அம்சமாக இருப்பதாக கருதி இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 16ஆம் தேதி திருமணம்  நடந்துள்ளது. இந்நிலையில் தங்களுடைய சமூக பழக்க வழக்கங்களை மீறியதாக கூறி காதல் திருமணம் செய்த காதல் தம்பதியையும், அவரது குடும்பத்தினர் மற்றும் திருமணத்தில் பங்கேற்ற உறவினர்களையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஊர் கட்டுப்பாட்டை மீறியவர்களை மீண்டும் ஊரில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றால்  அபராத தொகையை கட்டி, தங்கள் வம்ச தலைவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டதாகவும்,  திருமணத்தில் பங்கேற்ற பலர் அபராதம் கட்டி, சட்டையை கழற்றி துண்டை இடுப்பில் கட்டி தலைவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததோடு, சாணி கரைத்து ஊரை சுத்தப்படுத்த வேண்டும் என்றும் அதுவரை ஊரில் எந்த நிகழ்விலும் பங்கேற்க கூடாது, பல லட்சம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் எனவும் ஊர் பெரியவர்கள் மிரட்டியதாகவும் மனுவில் கூறியுள்ளனர்.

வீடியோ ஆதாரத்துடன் அளிக்கப்பட்ட இந்த புகார் குறித்து ஊர் தலைவர் கணேசனிடம் கேட்டபோது, இதுபோன்று நாங்கள் யாரையும் காலில் விழும்படிகட்டாயப்படுத்தவில்லை என்றும் யாரையும் அபராதம் கட்ட சொல்லவில்லை எனவும் மறுத்தார். வயதில் மூத்தவன் என்பதால் தன்னிடம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஏதேனும் புகார்கள் தெரிவிப்பார்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எப்போதும் காதலுக்கு சாதி தான் பிரச்சனை என்று சிலர் கூறி வரும் நிலையில், இந்த சாதிக்கு காதலே பிரச்சனையாக மாறி இருக்கின்றது...

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments