ஓராண்டைக் கடந்தும் நிற்காத குண்டு சப்தம்.. முடிவுக்கு வருமா உக்ரைன்- ரஷ்யா போர்..?

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த பின்னரும், இன்னும் நீடித்து வரும் போரின் பின்னணியை விளக்குகிறது செய்தித் தொகுப்பு...
1945 முதல் 1991 வரை தனது நாட்டின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைன் மீது ரஷ்யாவுக்கு இவ்வளவு வன்மம் ஏன்? உக்ரைனின் பின்னணியில் இருக்கும் உலக அரசியல்தான் இதற்குக் காரணம்.
நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேர முயன்றதால் பிரச்சனை தொடங்கியது. அமெரிக்காவின் தலைமையிலான நேட்டோவில் உக்ரைன் இணைந்தால் தனக்கு பாதுகாப்பு இருக்காது என்று உணர்ந்த ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுத்தது.
அதேநேரத்தில் ரஷ்யா வலிமை பெறுவதை ஐரோப்பிய நாடுகளும் அச்சுறுத்தலாக நினைப்பதால் பல்வேறு நாடுகளும் ரஷ்யாவைச் சுற்றி படைகளைக் குவித்து வைத்துள்ளன. இவற்றுக்கு நடுவேதான் மரம் அமைதியை விரும்பினாலும் காற்று விடுவதாய் இல்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட உக்ரைன் தற்போது உக்கிரமாக மாறியுள்ளது.
இந்தப் போரில் உக்ரைனின் பல முக்கிய நகரங்கள் ரஷ்ய ராணுவத்தால் சின்னாபின்னமாகிக் கிடக்கின்றன. கிழக்கு உக்ரைனிலுள்ள கார்கிவ், மரியூபோல், லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், ஜபோரிஜியா, மற்றும் தெற்கு உக்ரைனிலுள்ள மிக்கலேவ், கெர்சன் போன்ற பகுதிகள் மக்கள் வாழத் தகுதியற்றுப் போய்விட்டன. வரலாற்றுச் சின்னங்கள் பல ஒரே ஆண்டில் சிதிலமடைந்து போய்விட்டன.
2 லட்சம் ராணுவ வீரர்களும், 42 ஆயிரம் பொதுமக்களும் இந்தப் போரில் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 57 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும், 15 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவை எல்லாவற்றையும்விட மிகக் கொடுமை, ஒரு கோடியே 50 லட்சம் பேர் தங்கள் வாழிடங்களில் இருந்து அகதிகளாக வேறு நாடுகளில் இடம்பெயர்ந்திருப்பதுதான்.
பேரழிவைப் பற்றிக் கவலைப்படாமல் ரஷ்யா போரைத் தொடர்வதும், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வருவதும் போரை நீடிக்கச் செய்துள்ளது. இந்த இரு நாடுகள் தவிர, கச்சா எண்ணெய்- உணவுப்பொருள் தட்டுப்பாடு, அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றம் என பிற நாடுகளின் மக்களையும் இந்தப் போர் பாதித்து வருகிறது.
உலகின் பெரும்பாலான நாடுகள் ஒரு சார்பாக இருக்க, இதில் நடுநிலை வகித்து வரும் இந்தியா போரை நிறுத்த வேண்டும் என இருநாடுகளையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
உக்ரைனுக்கு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளும், ரஷ்யாவுக்கு சீனாவும் உதவி செய்வதை நிறுத்த வேண்டும். ரஷ்யா-உக்ரைன் தலைவர்கள் நேரில் சந்திக்க வேண்டும். இருதரப்பையும் சமாதானப்படுத்த ஐநா தீவிரமாகத் தலையிட வேண்டும். இதெல்லாம் நடக்காமல் இந்தப் போர் முடிவுக்கு வருமா என்பது கேள்விக்குறிதான்...
Comments