இ.எம்.ஐ யில் R15 பைக்.. மாணவிகள் வாகனத்தின் முன்பு குரங்கு சேட்டை..! பைக்குகளை பறிமுதல் செய்தது போலீஸ்

0 6074

சாத்தான்குளம் அருகே மகளிர் கல்லூரி மாணவிகள் வாகனத்தை பின் தொடர்ந்து சென்று இருசக்கர வாகனத்தில் கைகளை விட்டு கெத்து காட்டிய இளைஞர்களின் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர் .

குடும்பம் வறுமையில் வாடினாலும், இ.எம்.ஐயில் வாங்கிய பைக்கை வைத்துக் கொண்டு அழிச்சாட்டியம் செய்த புள்ளிங்கோக்களிடம் இருந்து பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் தனியார் வேன் மூலம் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் அந்த கல்லூரி வேன் செல்லும் போது வேனின் முன்பு காலை மற்றும் மாலை நேரங்களில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில், "மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற டீ-சர்ட் போட்ட 2k புள்ளிங்கோஸ்" இருவர், விருவு பூனை போல கல்லூரி மாணவிகளின் வேனை விரட்டிச்சென்று பைக்ரேஸ் விடுவதை வழக்கமாக செய்துள்ளனர்.

இரு கைகளை விட்டு இருசக்கர வாகனத்தில் செல்வது, கட் அடித்து செல்வது ... சாலையோரம் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மாணவிகளை உற்று நோக்குவது என்று நாளுக்கு நாள் இந்த இருவரின் குரங்கு சேட்டை அதிகாரித்ததால், மாணவி ஒருவர் தனது செல்போனில் இரு சக்கர வாகன புள்ளிங்கோக்களின் அழிச்சாட்டியத்தை படம் பிடித்தார்..

இந்த பைக் ரோமியோக்கள் , தினமும் கல்லூரி நாட்களில் வேனை ஓட்டி செல்லும் ஓட்டுனருக்கு இடையூறாக இருந்து வருவதாக தட்டார்மடம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இருசக்கர வாகனத்தின் பதிவெண்ணை வைத்து அன்பின் நகரம் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

கெத்து காட்டிய இரண்டு இளைஞர்களும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் சிறுவயதில் இருந்தே பள்ளிக்கு செல்லாமல் ஊதாரியாக சுற்றிய இருவரும், அந்தபகுதியில் உள்ள துடைப்பம் தயாரிக்கும் கம்பெனியில் தினகூலிகளாக உள்ளதாகவும், போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

வாரந்தோறும் தங்களுக்கு கிடைக்கும் பணத்தை வீட்டில் கொடுக்காமல் பைனான்ஸ் மூலம் இரு சக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு, பருவபெண்களை பார்த்தால் வீதியில் வித்தை காட்டுவது வாடிக்கை என போலீசார் கூறுகின்றனர்.

அந்தவகையில், கல்லூரி செல்லும் மாணவிகளை கவர்ந்து காதல் வலையில் வீழ்த்தும் நோக்கில் இந்த அலப்பறையில் ஈடுபட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து இரு பைக்குகளையும் பறிமுதல் செய்த போலீசார் அந்த இளைஞர்களை எச்சரித்து வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். புத்தம் புது பைக்குகளுடன் காவல் நிலையம் வந்த இருவரும் வீட்டுக்கு, பொடி நடையாக செல்லும் நிலை ஏற்பட்டது.

பைக்குகளில் மாணவிகளை பின் தொடர்வது துரத்துவது போன்ற விபரீத செயல்களில் ஈடுபட்டால் பைக்குகளை பறிமுதல் செய்வதோடு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments