7 அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளித்து மத்திய பட்ஜெட் தாக்கல்..!

0 1619

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கான செலவுகள் 66 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, 79 ஆயிரம் கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் போக்குவரத்து உட்கட்டமைப்பை மேம்படுத்த முன்னுரிமை வழங்கும் வகையில், 15 ஆயிரம் கோடி தனியார் முதலீட்டுடன், 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பசுமை எரிசக்தி மேம்பாட்டுத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், மூலதன முதலீடாக 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக கூறிய நிதிஅமைச்சர், படிம எரிபொருள் இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்கும் வகையில், 19,700 கோடி மதிப்பில், தேசிய பசுமை ஹைட்ரஜன் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

லடாக்கில், மத்திய அரசின் 8,300 கோடி ரூபாய் நிதி பங்களிப்புடன், 20,700 கோடி மதிப்பில், 13 ஜிகா வாட் பசுமை எரிசக்தி உற்பத்தி ஆலை அமைக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகரங்களின் உட்கட்டமைப்புக்காக, ஆண்டுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக அமைச்சர் அறிவித்துள்ளார். அதேபோல், சிறு, குறு நிறுவனங்களின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு, கடன் உத்தரவாத திட்டத்திற்கு கூடுதலாக 9000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக தெரிவித்தார்.


அடுத்த 3 ஆண்டுகளில், பழங்குடியினர் மேம்பாட்டுக்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதாக தெரிவித்த நிதிஅமைச்சர், திறமையான நீதித்துறை நிர்வாகத்திற்காக, நீதித்துறையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் கீழ், இ-நீதிமன்றங்களுக்கு 7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார்.

கோபர்தன் திட்டத்தின் கீழ், 10 ஆயிரம் கோடி முதலீட்டில், கால்நடை மற்றும் கரிம கழிவுகளிலிருந்து எரிவாயு தயாரிக்கும் 500 நிலையங்கள் அமைக்கப்படும் என குறிப்பிட்ட அமைச்சர், கரும்பு விவசாயிகள் நிலுவைத் தொகை உள்ளிட்டவற்றை பெற ஏதுவாக, கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு 10,000 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்குவதாக தெரிவித்தார்.

வேளாண் துறையை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டு, அதில் தோட்டக்கலைத்துறைக்கு செலவிட சுமார் 2,200 கோடி ஒதுக்கப்படுவதாகவும், மீன்வளத்துறையை மேம்படுத்த ஆறாயிரம் கோடி ஒதுக்கப்படுவதாகவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments