தலையில் வெட்டு.. ரத்தம் ஒழுக பேருந்தை மறித்து தம்பதி அலப்பறை..!

0 2173

சிவகங்கையில் தலையில் வெட்டுக்காயத்துடன் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் மருத்துவமனை செல்ல மறுத்து, மனைவியுடன் சாலையில் பேருந்தை மறித்து போராட்டம் நடத்திய நிலையில், மயங்கியதால் மிரண்டு போய் ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சிவகங்கையில் தலையில் ரத்தக்காயத்துடன் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் சாலையில் செல்லும் பேருந்துகளை மறித்து போராடிக் கொண்டிருப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. விரைந்து வந்த போலீசார் அவரை அப்புறப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றும் அவர் எழுந்திருக்க மறுத்தார்.

விசாரணையில் அவர் சிவகங்கை மேலரத வீதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பாக்கியராஜ் என்பதும் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த அவரை இரு நபர்கள் சவாரிக்கு அழைத்ததாகவும், அவர் செல்ல மறுத்ததால் அரிவாளால் வெட்டி விட்டு சென்றதாகவும், அவர்களை கைது செய்ய வலியுறுத்தி அவரது மனைவியுடன் அவர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

தலையில் உள்ள வெட்டுக்காயத்தில் ரத்தம் ஒழுகிய நிலையில் சாலையில் இருந்து எழுந்திருக்க மறுத்த அவரை போலீசார் தூக்க முயன்ற போது அவரது மனைவி குறுக்கே புகுந்து , குற்றவாளியை கைது செய்தால் தான் மருத்துவமனைக்கு வருவார் என்று தடுத்தார்.

சாலையோரம் நின்ற பைக்குகளை தள்ளி விட்டும், சாலையோர கடையின் போர்டை தட்டி இழுத்தும் அவரது மனைவி செய்த அலப்பறைகளும் நீண்டது.

போலீசாரும் சொல்லி பார்த்து சோர்வடைந்தனர். வாகனங்களை மறித்தவரை இரு இளைஞர்கள் மெதுவாக சாலையோரம் இழுத்து வந்த நிலையில் போக்குவரத்து சீரானது. அதற்குள்ளாக பாக்யராஜ் மயங்கிச்சரிந்தார்.

அதுவரை மருத்துவமனை செல்ல மறுத்த பாக்யராஜின் மனைவி, கணவன் மயங்கியதும் மிரண்டு போய் மருத்துவமனைக்கு கூட்டிச்செல்லும் படி கூச்சலிட்டார். தயாராக அங்கு வந்த 108 ஆம்புலன்ஸில் ஏற்றி பாக்யராஜை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே பாக்யராஜை அரிவாளால் வெட்டிய நபர்கள் யார் ? என்றே அடையாளம் தெரியாது என்று அவரது மனைவி கூறியதால் தாக்குதல் நடத்திய இருவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments