திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு..!

0 2758

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட வைணவத் திருத்தலங்களில் நடைபெற்ற சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசித்தனர். 

மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசியாகக் கொண்டாடப்படுகிறது. பெருமாளின் இருப்பிடமாகக் கருதப்படும் வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுவதாக நம்பிக்கை..

வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நள்ளிரவிலும் கடும் குளிரை பொருட்படுத்தாது திரளான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கமிட்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

சுமார் 4 டன் எடையுள்ள மலர்களால் ஏழுமலையான் கோவில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகம் முழுவதும் கண் கவர் சரவிளக்கு அலங்காரமும் செய்யப்பட்டுள்ளது.

பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில், பாண்டியன் கொண்டை, ரத்தின அங்கி, ஆண்டாள் கிளிமாலை உள்ளிட்ட திருஆபரணங்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டார்.

காலை 4.45 மணியளவில் சொர்க்கவாசல் திறந்ததும் நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலை கடந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஸ்ரீரங்கத்தில் நள்ளிரவு முதல் காத்திருந்த திரளான பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர். சொர்க்கவாசல் திறப்பையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பரமபதவாசல் வழியாக பார்த்தசாரதி பெருமாள் வந்து நம்மாழ்வாருக்கு காட்சி அளித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா... என கோஷங்கள் எழுப்பினார்கள்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகேயுள்ள பாண்டுரங்கன் கோயிலில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து, திரளான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்திலுள்ள புகழ்பெற்ற வைணவத் திருத்தலமான பூவராக சுவாமி கோயிலுக்கு அதிகாலை முதலே வரத்தொடங்கிய பக்தர்கள், சொர்க்க வாசல் திறக்கப்பட்டபோது பக்தி பரவசத்தில், ஓம் நமோ நாராயணா என கோஷமிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments