வேலி தாண்டிய பெண்.. வேட்டையாடிய குடும்பம்.. பிணக்கூறாய்வில் அம்பலம்.. கதையை முடித்த செல்ஃபி..!

0 3055
வேலி தாண்டிய பெண்.. வேட்டையாடிய குடும்பம்.. பிணக்கூறாய்வில் அம்பலம்.. கதையை முடித்த செல்ஃபி..!

சென்னை திருவொற்றியூரில் உடல் நலக்குறைவால் பலியானதாக கூறப்பட்ட பெண்ணை , குடும்பத்தோடு சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தது 3 மாதம் கழித்து பிணகூறாய்வு மூலம் அம்பலமாகி உள்ளது . கணவனை ஏமாற்றி காதலர்களுடன் சுற்றிவந்த பெண்ணுக்கு செல்பியால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...

சென்னை புதுவண்ணாரப்பேட்டை நாகூரார் தோட்டம் 1 வது தெருவைச் சேர்ந்தவர் மீனவர் செல்வம் . இவர் 10 வருடங்களுக்கு முன்பு சுமித்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு மனைவியின் தாய், தந்தையுடன் வசித்து வந்துள்ளார். செல்வம், சுமித்ரா தம்பதியினருக்கு இரு மகன்கள் உள்ள நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி மர்மமான முறையில் சுமித்ரா உயிரிழந்தார்.

காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சுமித்ரா தலைவலி என்று கூறியதாகவும், தாய் ரெஜினா தைலம் தேய்த்து விட்டதாகவும் கணவர் காபி மற்றும் மாத்திரை வாங்கி கொடுத்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர். சுமித்ராவின் உடலில் எந்த காயமும் இல்லாததால் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் சுமித்ராவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சுமித்ராவின் மரணத்துக்கான காரணத்தை கண்டறிய உடலின் உள்பாகங்கள் தடய அறிவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் சுமித்ரா கழுத்து நெரிக்கப்பட்டதால் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகத்துடன் கூறப்பட்டிருந்தது.

விசாரணையின் போது பாபநாசம் கமல்ஹாசன் பாணியில் குடும்பமே ஒரே மாதிரி தாங்கள் சுமித்ராவை ஒன்றுமே செய்யவில்லை என்று சமாளித்து வந்ததால் போலீசாரால் அவர்களை கைது செய்ய இயலவில்லை. இந்த நிலையில் சுமித்ராவின் குடல் பகுதியில் சேகரிக்கப்பட்ட தடயவியல் ஆய்வு முடிவுகள் போலீசாரின் கைக்கு துருப்புச்சீட்டாக கிடைத்தது.

சுமித்ராவின் குடல் பகுதியில் காபியோ, மாத்திரை கரைசலோ இல்லை என்பதால் விசாரணையின் போது அவரது தாய் மற்றும் கணவன் கூறியது பொய் என்பதை உறுதி படுத்திய போலீசார், முதலில் கழுத்தை நெரித்தது நீங்கள் தானே? என்று டெக்னிக்கலாக போட்டு வாங்க, ஒருவர் மாற்றி ஒருவர் உண்மையை சொல்லியதால் சுமித்ரா கொலை செய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது.

திருவொற்றியூரில் கூட்டு குடும்பமாக வசித்து வந்த நிலையில் சுமித்ரா, வேறு ஒரு ஆணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற செல்ஃபி புகைப்படம் வெளியானதால், அங்கிருந்து வீட்டை காலி செய்து புது வண்ணாரப்பேட்டை நாகூரான் தோட்டம் பகுதியில் குடியேறினர். அதன் பிறகும் அடங்காத சுமித்ரா, காதலனுடன் செல்போனில் மணிக்கணக்கில் பேசி வந்துள்ளார்.

குடும்பத்தினர் கண்டித்தும் அடங்காத சுமித்ரா கடந்த ஆகஸ்ட் மாதம் 11 தேதி காலையில் வீட்டை விட்டு சென்று காதலனை சந்தித்து விட்டு பிற்பகல் 3 மணிக்குத் தான் வீடு திரும்பியுள்ளார். தாய் ரெஜினா சத்தம் போட்டதால், தாயின் தலையில் மணியை எடுத்து அடிக்க அவரும் திருப்பி தாக்கி உள்ளார்.

சண்டைக்கு பின்னர் படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்த சுமித்ராவை, தாய் ரெஜினா, தந்தை செல்வக்குமார், கைகால்களை பிடித்துக் கொள்ள கணவன் செல்வம் வாயை பொத்தி கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு உடல் நலக்குறைவால் பலியானதாக நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. 3 பேரையும் கொலை வழக்கில் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments