ஒரு வயது ஆண்குழந்தைக்கு வளர்ச்சி இல்லா நாக்கிற்கு பதிலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை..! அரசு மருத்துவர்கள் அலட்சியம்

0 2995
ஒரு வயது ஆண்குழந்தைக்கு வளர்ச்சி இல்லா நாக்கிற்கு பதிலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை..! அரசு மருத்துவர்கள் அலட்சியம்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆண் குழந்தையின் நாக்கிற்கு பதிலாக பிறப்புறுப்பில் தவறுதலாக அறுவைசிகிச்சை செய்யப்பட்டதாக மருத்துவர்கள் மீது குழந்தையின் தந்தை காவல்நிலையத்தில் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கே.கே.நகர் காலனி அமீர்பாளையம் பகுதியை சேர்ந்த அஜித்குமார், கார்த்திகா தம்பதியருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

அந்த குழந்தைக்கு நாக்கு வளர்ச்சி இல்லாத நிலையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியதால் அப்போதே குழந்தையின் நாக்கில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

ஓராண்டு கழித்து மீண்டும் நாக்கில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் முன் கூட்டியே கூறி இருந்ததால் மீண்டும் செவ்வாய்கிழமை நாக்கில் 2 வது அறுவை சிகிச்சை செய்ய குழந்தை அனுமதிக்கப்பட்டது.

அங்குள்ள மருத்துவர்கள், அந்த ஆண் குழந்தைக்கு நாக்கிற்கு பதிலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்திருப்பதை கண்டு
அதிர்ச்சியடைந்த பெற்றோர். மருத்துவர்களிடம் கேட்டபோது தவறு நடந்து விட்டதாக கூறி மீண்டும் நாக்கிலும் அறுவை சிகிச்சை செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

மருத்துவர்களின் அலட்சியம் குறித்து குழந்தையின் தந்தை அஜீத்குமார், மதுரை அரசு மருத்துவமனை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஒரு வயது குழந்தைக்கு தவறாக மாற்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் எதிரொலியாக சைல்டுலைன் அதிகாரிகளும் நேரடியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து மருத்துவமனை டீன் ரத்தினவேலிடம் கேட்டபோது:அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் சரியாக பெற்றோர்களிடம் சொல்லாததால் தான் இந்த பிரச்சனை என்றும், குழந்தைக்கு சிறுநீர் பாதையிலும் அடைப்பு இருந்ததால் முதலில் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், பின்னர் நாக்கில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது எனவும் மழுப்பலாக பதில் அளித்தார்.

தனது குழந்தைக்கு சிறுநீர் செல்வதில் எந்த பிரச்சனையும் இல்லாத நிலையில் அறுவை சிகிச்சையை மாற்றி செய்த மருத்துவர்களுக்கு சாதகமாக மருத்துவமனை டீன் செயல்படுவதாக குழந்தையின் தந்தை குற்றஞ்சாட்டி உள்ளார்.

 

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் போல மிகவும் கவனக்குறைவாக செயல்பட்டுள்ள இந்த மருத்துவர்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments