250 சவரன் கொள்ளை.. நடிகர் ஆர்.கே வீட்டில் கூர்க்கா பார்த்த வேலை..! நம்பிக்கை துரோகிக்கு வலை
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள நடிகர் ஆர்.கே வீட்டிற்குள் புகுந்து அவரது மனைவியை கட்டிபோட்டு 250 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் அவர்களது வீட்டில் வேலை செய்த கூர்கா பார்த்த திருட்டு வேலை அம்பலமாகி உள்ளது.
எல்லாம் அவன் செயல், அழகர் மலை, அவன் இவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் ஆர்.கே என்கிற ராதாகிருஷ்ணன்.
63 வயதான ஆர்.கே , மனைவி ராஜியுடன் சென்னை நந்தம்பாக்கம், டிபன்ஸ் காலனியில் உள்ள பங்களாவில் வசித்து வந்தார். சம்பவத்தன்று இரவு வெளியில் மழை பெய்து கொண்டிருந்த போது ஆ.கே.வின் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று வீட்டில் தனியாக இருந்த ஆர்.கே வின் மனைவி ராஜியை கட்டிபோட்டு வாயில் பிளாஸ்டர் ஒட்டிவிட்டு பீரோவில் இருந்து 250 சவரன் நகைகளையும் 3 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த நந்தம்பாக்கம் போலீசார் அந்தப்பகுதியில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை சேகரித்தனர். அதில் ஆட்டோவில் வந்த கும்பல் வீட்டிற்குள் புகுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டுக்குள் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். பல வருடங்களாக ஆர்.கே வின் வீட்டில் காவலாளியாக இருந்த நேபாளத்தை சேர்ந்த ரமேஷ் தனது கூட்டாளிகள் இருவரை அழைத்து வந்து தங்க நகைகளை அள்ளிச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த கொள்ளை கும்பல் சென்னையில் இருந்து தப்பிச்செல்லாமல் இருக்க சென்னை விமான நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
Comments