பிரம்மாண்ட தீப உற்சவம்.. பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.. விழாக்கோலம் பூண்ட அயோத்தி

தீபாவளியை முன்னிட்டு ஆயோத்தி ராமர் கோயிலில் வழிபாடு நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரம்மாண்டமான தீப உற்சவ கொண்டாட்டத்தை முன்னின்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மொத்தமாக 18 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்திக்கு சென்ற பிரதமர் மோடி, ராம் லல்லா கோயிலில் வழிபாடு செய்தார். அங்குள்ள குழந்தை ராமர் சிலைக்கு தீபாராதனை காட்டி பிரதமர் பிரார்த்தனை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, ராமஜென்ம பூமி தீர்த்த தலத்தை ஆய்வு செய்த பிரதமர், கோயில் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டார். ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர், அயோத்தியில் ராஜ்யாபிஷேகம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ராமர் - சீதை வேடமணிந்தவர்களுக்கு திலகமிட்டு, தீப ஆராதனை செய்தார்.
பின்னர் உரையாற்றிய பிரதமர், நாடு தமது பாரம்பரியத்தில் பெருமை கொள்வதாகவும், அடிமை மனநிலையில் இருந்து விடுதலை பெற்றுள்ளதாகவும் கூறினார். பிரயக்ராஜில் 51 அடி உயர ராமர் சிலை நிறுவப்பட உள்ளதாக கூறிய பிரதமர், கடவுள் ராமரின் லட்சியங்களை பின்பற்றுவது அனைத்து இந்தியர்களின் கடமை என்றார்.
இதனைத் தொடர்ந்து, சரயு நதியின் புதிய படித்துறையில் நடைபெற்ற ஆரத்தியில் பங்கேற்ற பிரதமர், பிரம்மாண்டமான தீப உற்சவ கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், 18 லட்சத்திற்கும் மேற்பட்ட தீபங்களை 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஏற்றி வழிபாடு செய்தனர்.
இதனிடையே, சரயு நதிக் கரையில் லேசர் காட்சிகளுடன் நடைபெற்ற முப்பரிமாண ஹோலோ கிராபிக்ஸ் காட்சிகளை பிரதமர் பார்வையிட்டார்.
சரயு நதிக்கரையில் நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சி, காண்போரை வெகுவாக கவர்ந்தது.
Comments