பாதகரசுவாமி கோவிலில் விளக்குபூஜை நடத்தவிடாமல் பெண்களை விரட்டிய போலீசார்..! உயர்நீதிமன்ற உத்தரவை மீறி அத்துமீறல்

0 3942

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி பாதகரசுவாமி கோவில் திருவிழாவில் விளக்குபூஜை நடத்தக்கூடாது என்று அனுமதி மறுத்து கோவிலுக்குள் புகுந்து போலீசார் பெண்களை விட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி அருகே புகழ்பெற்ற பாதகரசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் முதல் மரியாதை அளிப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது.

ஒரு தரப்பினர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதன் அடிப்படையில் கோவிலில் சுவாமிக்குத்தான் முதல் மரியாதை என்றும் மனிதர்களுக்கு அல்ல , சுவாமிக்கு முன்பு எல்லோரும் சமம் என்று உத்தரவிட்டது நீதிமன்றம்.

இதன் தொடர்ச்சியாக முதல் மரியாதை இல்லாமல் திருவிழா நடத்தலாம் அதைவிடுத்து முதல் மரியாதைக்காக பிரச்சனை செய்தால் திருவிழா நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதிக்காது என்று கலெக்டரும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி கோவில் திருவிழா நடத்த ஏற்பாடு செய்த விழாக்குழுவினர் முதல் நாள் நிகழ்ச்சியாக திங்கட்கிழமை 3 ந்தேதி, 508 பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே நிறைய பெண்கள் கோவிலுக்கு வருகை தந்து காத்திருந்தனர். இந்த நிலையில் அங்கு வந்த குரும்பூர் பொறுப்பு காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் என்பவர் 10 க்கும் மேற்பட்ட காவலர்களுடன் கோவிலுக்குள் நுழைந்தார். விளக்கு பூஜைக்கு வந்த பெண்களை கோவிலுக்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்பிய போலீசார், கோவிலுக்குள் இருந்த பெண்களை வெளியே போகச்சொல்லி எச்சரித்ததாக கூறப்படுகின்றது.

கோவிலில் விளக்கு பூஜை நடத்த தன்னிடம் அனுமதி வாங்கவில்லை என்று கூறிய காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன், இங்கிருந்து செல்லாவிட்டால் அடித்து விரட்ட நேரிடும் என்று எச்சரித்ததாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணனிடம் கேட்ட போது , அப்படியேதும் நடக்கவில்லை என்று முதலில் மறுத்தார், வீடியோ ஆதாரம் இருப்பதாக கூறியதும் முதல்மரியாதை கொடுப்பது தொடர்பாக பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருந்ததால் பூஜையை தடுத்து  நிறுத்தியதாக கூறி சமாளித்த அவர், நேரில் வந்து லெட்டராக கேளுங்கள் தருகிறேன் எனக்கூறி நழுவினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments