சொந்த வீட்டில் 550 சவரன் நகைகளை திருடி காதலிக்கு சூட்டிய பைனான்ஸியர் கைது..! விடுதி காதல் விபரீதம்

0 5107

பூந்தமல்லியில் சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகை மற்றும் தங்ககட்டிகளை திருடிய  பைனான்ஸியர், காதலியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவி கோபித்துக் கொண்டு தாய்வீட்டுக்கு சென்றதால் காதல் பரிசாக காதலிக்கு கார் கொடுத்தவர் களவு வழக்கில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

சென்னையை அடுத்த பூந்தமல்லி முத்துநகரை சேர்ந்த பைனான்ஸியர் சேகர். இவரது தம்பி ராஜேஸ். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. தாயார் தமிழ்ச்செல்வியுடன் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். குடும்பமே பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேகருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மனைவி பிரிந்து தாய் வீட்டுக்கு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சேகரின் மனைவி திரும்பி வந்து தனது லாக்கரில் வைத்துச் சென்ற 300 சவரன் நகைகளை பார்த்த போது அது மாயமாகியிருந்தது.

இதையடுத்து ராஜேஸின் மனைவி நகைகள், மாமியார் தமிழ்ச்செல்வியின் 200 சவரன் நகைகளும், 5 தங்க கட்டிகளும் லாக்கரில் இருந்து மாயமாகி இருப்பது தெரியவந்தது.

இது குறித்து அவர்கள் பூந்தமல்லி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில் பைனான்ஸியர் சேகர் 550 சவரன் நகையை திருடி காதலியான இளம்பெண்ணிடம் கொடுத்திருப்பது அம்பலமானது.

சேகரின் மனைவி பிரிந்து சென்ற பிறகு, 40 வயது சேகருக்கு வேளச்சேரி கேசரிபுரத்தை சேர்ந்த 22 வயதான ஸ்வாதியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் போரூர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்துள்ளனர்.

தனது இளம் காதலியை திருப்திப்படுத்த ஏராளமான பணம் கொடுத்த சேகர், வீட்டிலிருந்த 550 சவரன் நகைகளையும், கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சென்று ஸ்வாதிக்கு அணிவித்து மகிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் காதல் பரிசாக ஸ்வாதிக்கு கார் ஒன்றை வாங்கிக் கொடுத்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில் சொந்த வீட்டிலேயே நகைகளை அள்ளி காதலிக்கு சூடிய சேகர் மற்றும் ஸ்வாதியை பூந்தமல்லி போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மொத்த நகைகளையும் எங்கே மறைத்து வைத்துள்ளனர் ? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments