திருவிழாவில் திருடி சொந்தமாக வீடு வாங்கிய களவாணி குடும்பம்..! அரபு நாடுகளுக்கு இன்ப சுற்றுலாவாம்..!
குடும்பத்துடன் காரில் ஊர் ஊராக சென்று, கோவில் திருவிழாக் கூட்டத்திற்குள் புகுந்து பெண்களிடம் நகைகளை பறித்துச்செல்லும் களவாணி குடும்பத்தை கோவை போலீசார் கைது செய்துள்ளனர். கூட்டத்தில் கொள்ளையடித்து அரபு நாடுகளுக்கு இன்ப சுற்றுலா சென்று வந்ததோடு கோவையில் சொந்தமாக வீடு வாங்கிய கேடி குடும்பம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
கோவையில் பல்வேறு பகுதிகளில் நடந்த கோவில் திருவிழாக்களில் கூட்டத்திற்குள் புகுந்து பெண்களின் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளை களவாடிய கொள்ளையர்களை பிடிக்க காவல் ஆணையர் பால கிருஷ்ணன் சிறப்புத்தனிப்படை ஒன்றை அமைத்தார்.
தனிப்படை உதவி ஆணையர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் பல்வேறு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளை நடந்த ஊர்களின் திருவிழா நடந்த போது எல்லாம் சந்தேகத்துக்கு இடமான ஒரு கார் அங்கு வந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த காரின் எண்ணை வைத்து கோவை தெலுங்குபாளையத்தை சேர்ந்த ராமு, அவரது மனைவி நாகம்மாள், மகன் சத்யா ஆகியோரை பிடித்து விசாரித்த போது, தங்களை பக்திமான்களாக காட்டிக் கொண்டு காரில் ஊர் ஊராக சென்று திருவிழாக்களில் குடும்பத்துடன்சாமி கும்பிடுவது போல பெண்களிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர்கள் பொள்ளாச்சி, கும்பகோணம், பாலக்காடு, கோவை பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி சில வருடங்களாக இந்த திருட்டு வேலையை அரங்கேற்றி உள்ளனர்.
சத்யாவின் மனைவி நந்தினி மாமியார் நாகம்மாளுடன் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும் பேருந்தில் ஏறி நகை பணத்தை அபேஸ் செய்து கொண்டு பேருந்தில் இருந்து இறங்கி, பின்னால் வரும் தங்கள் காரில் ஏறி தப்பிச்சென்று விடுவதை வழக்கமாக்கியதும், அப்படி கேரளாவில் கைவரிசை காட்டிய போது நந்தினி சிக்கிக் கொள்ள அவர் எர்ணாகுளம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கொள்ளையடித்த நகைகளை விற்று லட்சங்களை கொடுத்து கோவையில் சொந்தமாக வீடு வாங்கிய இந்த கேடி குடும்பத்தினர். அவ்வப்போது சிங்கப்பூர் , மலேசியா, அரபு நாடுகள் என்று இன்ப சுற்றுலா செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.
ஊரார் பணத்தை கொள்ளையடித்க்து உல்லாச வாழ்க்கை நடத்திய இந்த கேடி குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த களவாணி குடும்பத்தை சேர்ந்தவர்கள் இதற்கு முன்பு ஒரு சில வழக்குகளில் தனி தனியாக கைது செய்யப்பட்டிருந்தாலும் இவர்கள் குடும்பத்தோடு சேர்ந்து திருடி உல்லாச வாழ்க்கை வாழ்வது தற்போது அம்பலமாகி உள்ளது குறிப்பிடதக்கது.
Comments