கபினி அணையில் இருந்து நொடிக்கு 17,000 கன அடி நீர் திறப்பு..!
தொடர் கனமழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் காரணமாக காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கும் அதிகமாக நீர்வரத்து இருந்து வருகிறது. இதனால் பல கரையோரப்பகுதிகளில் தண்ணீர் புகுந்தது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து நொடிக்கு 80 ஆயிரத்து 161 கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து நொடிக்கு 17 ஆயிரம் கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளுக்குக் கீழ் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் பிலிக்குண்டு என்னுமிடத்தில் காவிரியில் தமிழகத்துக்கு நொடிக்கு ஒரு இலட்சத்து 80 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருந்தது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் அனைத்து அருவிகளையும் தடுப்பு வேலிகளையும் மூழ்கடித்து ஆறு முழுவதும் பரந்து விரிந்து வெள்ளம் பாய்கிறது.
தருமபுரி மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் இருந்த மக்களை வெளியேற்றிப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். ஆற்றில் குளிக்கவும், பரிசலில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அணைக்கு அதிகாலை நிலவரப்படி 2 இலட்சம் கன அடி நீர் வந்துகொண்டிருந்தது. அணையில் இருந்து சுரங்க மின் நிலையம் வழியாக நொடிக்கு 23 ஆயிரம் கனஅடி நீரும், 16 கண் மதகுகள் வழியாக ஒரு இலட்சத்து 87 ஆயிரம் கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 400 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து இன்று காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 லட்சத்து 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதால் கரையோரம் வசிப்பவர்கள் கவனமாக இருக்குமாறு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். கரையோரம் உள்ள வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரைக்கு உட்பட்ட கொல்லப்பட்டி பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் ஏராளமான வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மழைநீர் வெளியேற வெட்டப்பட்டுள்ள பாதையை பலர் வீடு கட்டி ஆக்கிரமித்துள்ளதால் மழைநீர் அங்கேயே தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
Comments