இலங்கை புதிய பிரதமர் பதவியேற்பு.! போராட்டகாரர்கள் மீது தாக்குதல்.! மீண்டும் போராட்டம்.!

இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தனே பதவியேற்றுள்ளார். இதனிடையே, அதிபர் மாளிகையின் முன்பு போராட்டகாரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து கொழும்புவில் மீண்டும் போராட்டம் தொடங்கியுள்ளது.
இலங்கையின் அதிபராக ரணில் விக்கிரமசிங்கே தேர்வான நிலையில், புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச கட்சியான இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் மூத்த எம்.பி. தினேஷ் குணவர்தனே பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 73 வயதான தினேஷ் குணவர்த்தனே, அதிபர் ரணில் விக்கிரமசிங்கே முன்பு 15-வது பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.
இதனிடையே நேற்று நள்ளிரவில் அதிபர் அலுவலகம் முன்பிருந்த போராட்டகாரர்கள் விரட்டி அடிக்கப்பட்டதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. அறவழியில் நடைபெற்ற போராட்டம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.
இன்று காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் மீண்டும் கூடிய போராட்டகாரர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். இலங்கை அதிபர் ரணிலுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
Comments