ஆணழகனின் 5 வருட காதல் 5 மாதத்தில் முடிந்த சோகம்..! தாலியை பறிக்க தைரியமில்லா முடிவு..!

0 133035
ஆணழகனின் 5 வருட காதல் 5 மாதத்தில் முடிந்த சோகம்..! தாலியை பறிக்க தைரியமில்லா முடிவு..!

சென்னை திருவொற்றியூரில் 5 வருடங்களாகக் காதலித்து திருமணம் செய்த மனைவி, ஐந்தே மாதத்தில் விவாகரத்து கேட்டதால் மிஸ்டர் தமிழ் நாடு ஆணழகன் போட்டியில் இரண்டாம் இடம்பிடித்த இளைஞர் விபரீத முடிவை தேடிக் கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

சென்னை ராயபுரம் எம்எஸ் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மதன். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தவர். கடந்த 4 மாதங்களாக சென்னை தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படை காவலராகப் பணிபுரிந்து வந்தார்.

மதன், கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்த ஹேமலதா என்ற பெண்ணை கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டு அப்பகுதியில் தனியாக வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்தார். உயர் படிப்பு படிப்பது தொடர்பாக ஹேமலதாவுக்கும், மதனுக்கும் மனக்கசப்பு இருந்து வந்த நிலையில் சம்பவத்தன்று தனக்கு விவாகரத்து தருமாறு ஹேமலதா, மதனிடம் கேட்டதால் இருவருக்குமிடையே மீண்டும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது மதன், தான் கட்டிய தாலியை கேட்டதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில், தான் உயிரோடு இருக்கும்வரை விவாகரத்து கொடுக்க மாட்டேன் என்றும் "என்னால் உன் படிப்பிற்கு எந்த பிரச்சினையும் இருக்காது, நீ தாய் வீட்டில் சந்தோஷமாக இருக்கலாம், நான் கேட்ட தாலி இன்னும் 12 மணி நேரத்தில் நீயே கழற்றிக் கொடுப்பாய்" என்று உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை பதிவு செய்து உறவினர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்துவிட்டு மதன் விபரீத முடிவை தேடிக் கொண்டார்.

மதன் நீண்ட நேரமாக படுக்கை அறையிலிருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த ஹேமலதாவின் உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது படுக்கை அறையில் மதன் தூக்கிட்டு தொங்கியபடி இருந்தார். உடனடியாக அவரை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மதன் உயிரிழந்தார் .

உடலை பிணக்கூறாய்வு செய்த பின்பு, மதன் உடலை மனைவி ஹேமலதாவிடம் உடலை ஒப்படைக்க கூடாது என்று மதனின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோர் வீட்டுக்கு மதன் உடலை கொடுக்கக்கூடாது என்று மனைவி ஹேமலதா தரப்பினர்கூறியதால் இருதரப்பினரும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் மதன் உடலை ஹேமலதா வீட்டில் அரை மணி நேரம் வைத்து விட்டு, பின்னர் மதனின் பெற்றோர் வீட்டுக்கு கொண்டு சென்று ஈமச்சடங்கு செய்த பின்னர் அடக்கம் செய்து கொள்ளுங்கள் என்று போலீசார் பேச்சுவார்த்தை செய்த பின்பு, இருதரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

காதல் தம்பதி தங்களுக்கு இடையே பிரச்சனை என்றால் சுமூகமாக பேசி தீர்த்துக் கொள்வதை விடுத்து, உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவைத் தேடக்கூடாது என்று சுட்டிக்காட்டுகின்றனர் காவல்துறையினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments