மிரட்டிப் பணம் பறித்த இளைஞர்கள்.. விரட்டிப் பிடித்த போலீசார்.! சினிமாவை மிஞ்சும் பரபர சேசிங்...!

0 3152

வேலூரில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்துச் சென்ற சிறுவன் உட்பட மூன்று பேரை விரட்டிச் சென்று பிடித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் அவரது பாதுகாவலருக்கும் பாராட்டு குவிகிறது.

கையில் கத்தியுடன் தப்பியோடியவர்களை விடாமல் சென்று விரட்டி பிடித்த எஸ்.பி.யின் சேசிங் குறித்து சிசிடிவி காட்சிகளுடன் விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு...

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே கிரீன் சர்க்கில் அருகே பச்சை குத்தும் தொழிலில் ஈடுபட்டிருந்த 2 இளைஞர்களிடம், பச்சை குத்துவதற்காக கிஷோர், பாலாஜி மற்றும் மற்றொரு சிறுவன் என மூன்று பேரும் வந்துள்ளனர். மூவரும் பச்சை குத்திவிட்டு, பணம் கொடுக்காமல் கத்தியைக் காட்டி மிரட்டியதோடு, அவர்களிடம் இருந்த ஆயிரத்து200ரூபாய் பணத்தையும் பிடுங்கிக் கொண்டு ஸ்கூட்டியில் தப்பியுள்ளனர். அந்த நேரம் பார்த்து அவ்வழியாக காரில் வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமார், காரிலேயே ஸ்கூட்டியை பின் தொடர்ந்து விரட்டிச் சென்றார்.

மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அதிவேகத்தில் தப்பிச் செல்ல முயன்ற கொள்ளையர்களை, சி.எம்.சி. மருத்துவமனை அருகே எஸ்.பி.யின் வாகனம் முடக்கியது.

செய்வதறியாமல் நின்ற கொள்ளையர்கள், போலீசாரை திசைதிருப்புவதற்காக இரண்டு பேர் இறங்கி சி.எம்.சி. மருத்துவமனைக்குள்ளும், ஒருவன் பைக்கிலும் என தனித்தனியாக பிரிந்து தப்பியோடினர்.

எப்படியாவது திருடர்களை பிடித்துவிட வேண்டும் என எண்ணிய எஸ்.பி. செல்வக்குமாரும், அவரது பாதுகாவலர் சதீஷ்குமாரும் காரை விட்டு இறங்கி, மருத்துவமனைக்குள் புகுந்தவர்களை பின் தொடர்ந்து விரட்டிச் சென்றனர். எஸ்.பி.யின் பாதுகாவலர் சதீஷ்குமார், துப்பாக்கியை காட்டவே, அடிபணிந்த கொள்ளையர்கள் அழுதுக் கொண்டே சரணடைந்தனர்.

முன்னதாக, மருத்துவமனைக்குள் கத்தியுடன் ஓடிய கொள்ளையர்களால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் கொள்ளையர்களை பிடிக்க முற்பட்ட நிலையில், கத்தியைக் காட்டியதால் அவர் விலகி விட்டார்.

இதனையடுத்து, மருத்துவமனைக்குள் பிடிபட்ட இரண்டு பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், பைக்கில் தப்பியவனை சலவன்பேட்டையில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் குடிபோதைக்கும், கஞ்சாவுக்கும் அடிமையானவர்கள் எனக் கூறப்படும் நிலையில், வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments