தொடர் மழை எதிரொலி ; திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிப்பு

0 2565
திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிப்பு

பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்காலும் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி அணை நிரம்பியதால் அதில் இருந்து நேற்றிரவு முதல் கொசஸ்தலை ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் முத்துக்கொண்டாபுரம் தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது. தரைப்பாலத்தைக் கடக்க வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் திருத்தணி அருகே வெங்கடாபுரத்தில் உள்ள தரைப் பாலம் மூழ்கியுள்ளது. பாலத்தின் இருபுறங்களிலும் தடுப்புகளை ஏற்படுத்தி வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பத்துக்கு மேற்பட்ட ஊர்களுக்கும், ஆந்திர மாநிலத்துக்கும் வாகனப் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

 திருவாலங்காடு அருகே கனகம்மாசத்திரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. தரைத்தளத்தில் உள்ள வகுப்பறைகளுக்குள்ளும் முழங்கால் அளவுக்கு நீர் தேங்கியுள்ளது.

 பூண்டி நீர்த்தேக்கத்துக்கு நீர்வரத்து நொடிக்கு 18,000 கன அடியாக அதிகரித்துள்ளது. 35 அடி உயரமுள்ள பூண்டி ஏரியில் 34 அடிக்குத் தண்ணீர் உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து மதகுகள் வழியாக 15 ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது

பூண்டி ஏரியில் இருந்து அதிக அளவில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒதப்பை பாலம் மூழ்கும் நிலையில் உள்ளது. இதனால் திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை இடையே வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் அமைத்துக் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 பிச்சாட்டூர் அணையில் இருந்து நொடிக்கு மூவாயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஊத்துக்கோட்டையில் உள்ள தரைப்பாலம் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது. புதிதாகக் கட்டப்படும் மேம்பாலத்தில் 80 விழுக்காடு பணிகள் முடிந்துள்ள நிலையில் அதில் வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments