காலவரம்புடன் இலக்கு நிர்ணயம்.. கேதார்நாத்தில் பிரதமர் பேச்சு..!

0 2599
காலவரம்புடன் இலக்கு நிர்ணயம்.. கேதார்நாத்தில் பிரதமர் பேச்சு..!

இந்தியா உயர்ந்த இலக்குகளைக் கொண்டுள்ளதாகவும், அந்த இலக்குகளை அடைவதற்கான கால வரம்பையும் நிர்ணயித்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இருந்து டேராடூனுக்குச் சென்ற பிரதமர் மோடியை விமான நிலையத்தில் உத்தரக்கண்ட் ஆளுநர் குர்மித் சிங், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் வரவேற்றனர். அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டரில் 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான கேதார்நாத்துக்குச் சென்ற பிரதமர் மோடி சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். அதன்பின் சற்றுநேரம் தியானம் செய்தார்.

 

கேதார்நாத் கோவில் அருகே ஆதி சங்கரர் சமாதியில் நிறுவப்பட்ட அவரது 12 அடி உயர உருவச் சிலையைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். 2013ஆம் ஆண்டு பெருவெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் சேதமடைந்த கேதார்நாத்தில் சீரமைப்புப் பணிகளின் ஒருபகுதியாக மந்தாகினி ஆற்றில் கட்டப்பட்ட தடுப்புச் சுவர், பாலம், புரோகிதர்களின் வீடுகள் உள்ளிட்ட 130 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தொடக்கி வைத்தார்.

 

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாட்டில் மதமும் ஆன்மீகமும் ஒரே போன்ற கருத்துக்களுடன் தொடர்புடையதாக நம்பிய ஒரு காலம் இருந்ததாகத் தெரிவித்தார். இந்திய தத்துவம் வாழ்க்கையை முழுமையான முறையில் பார்ப்பதாகவும், மனித நலன் பற்றிப் பேசுவதாகவும் தெரிவித்தார். கேதார்நாத்தில் நடைபெற்றுவந்த பணிகளை டெல்லியில் இருந்தவாறே தான் அடிக்கடி ஆய்வு செய்ததாகத் தெரிவித்த அவர், கேதார்நாத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

உத்தரக்கண்டில் நான்கு கோவில்களுக்குச் சாலை வசதி, ஹேம்குண்ட் சாகிப்புக்கு ரோப் கார் வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த நூறாண்டுகளில் வந்ததைவிட அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் அடுத்த பத்தாண்டுகளில் உத்தரக்கண்ட் மாநிலத்துக்கு வருவார்கள் எனக் குறிப்பிட்டார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருவதாகவும், வாரணாசியில் காசி விசுவநாதர் கோவில் திட்டம் விரைவாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இந்தியா உயர்ந்த இலக்குகளைக் கொண்டுள்ளதாகவும், அந்த இலக்குகளை அடைவதற்கான கால வரம்பையும் நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments