கட்டுக் கட்டாக ரூ 2 கோடி.. சோக்கா சிக்கிய ஷோபனா..! லஞ்சம் லஞ்சம் வீடெல்லாம் லஞ்சம்..!

0 213387
கட்டுக் கட்டாக ரூ 2 கோடி..! சோக்கா சிக்கிய ஷோபனா..! லஞ்சம் லஞ்சம் வீடெல்லாம் லஞ்சம்..!

அரசு பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கட்டிடங்களை கட்டுவதற்கு அனுமதி வழங்கும் பொறுப்பில் உள்ள செயற்பொறியாளர் ஷேபனா என்பவரது வீட்டில் இருந்து கட்டு கட்டாக 2 கோடி ரூபாய் லஞ்சப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பளத்தைவிட 100 மடங்கு கிம்பளம் பெறும் அரசு பெண் அதிகாரி கையும் களவுமாக சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் 57 வயதான ஷோபனா. வேலூரில் உள்ள தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தங்கி அங்கு உள்ள மண்டல தொழில்நுட்ப கல்வி அலுவலகத்தின் செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், தர்மபுரி ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள பாலிடெக்னிக் மற்றும் என்ஜினியரிங் கல்லூரிகளில் கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் தொடர்பாக டெண்டர் விடுவது, நிதி ஒதுக்கீடு செய்வது, கட்டுமான பணிகளை ஆய்வு செய்வது மற்றும் ஒப்பந்த பணிகளுக்கான பில் அனுமதிப்பது போன்ற பணிகளை சோபனா மேற்கொண்டு வருகிறார்.

ஏழை எளிய மாணவர்களின் கல்வி பயன்பாட்டுக்கு கட்டப்படும் கட்டுமானங்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், தரமற்ற முறையில் கட்டிடம் கட்டும் ஒப்பந்ததாரர்களிடம் மண்டல செயற்பொறியாளர் ஷோபனா லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கி குவித்து வருவதாக வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. கிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரஜினிகாந்த், விஜய், விஜயலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினர் செவ்வாய்கிழமை இரவு முதல் ரகசியமாக ஷோபனாவின் நடவடிக்கைகளை கண்காணித்தனர். வேலூர் ஜெயில் அருகே அணைக்கட்டு சாலையில் உள்ள ஒரு ஓட்டல் அருகே காரை நிறுத்திவிட்டு ஷோபனா , லஞ்ச கலெக்சனுக்காக காத்திருந்தார்.

ஒரு ஒப்பந்ததாரர் வந்து பார்த்து சென்றதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக ஷோபனாவின் காரை சுற்றிவளைத்து சோதனையிட்டனர். காரில் 5 லட்சம் ரூபாய் பணம் இருந்தது. இந்த பணத்திற்கு அவரிடம் முறையான கணக்கு இல்லை. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ச்சியாக சோபனா தங்கி இருந்த தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள அறையில் சோதனை நடத்தினர். அங்கு கட்டுக்கட்டாக 15 லட்சத்து 85 ஆயிரம் ரொக்க பணமும் 3 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 3 காசோலைகளும் கைப்பற்றப்பட்டன.

ஷேபனாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கட்டிடப்பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்களுக்கு தொகைக்குரிய பில்லை அனுமதிப்பதற்காக, தான் குறிப்பிட்ட சதவீத கமிஷனை லஞ்சமாக பெற்றதை ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக புதன்கிழமை, ஓசூர் நேரு நகர் 2 வது குறுக்கு தெருவில் உள்ள ஷோபனாவின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

வீட்டின் படுக்கை அறையில் இருந்து கட்டுகட்டாக 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கட்டுக்கள் சிக்கியது. அதில் மொத்தமாக 2 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரத்து 300 ரூபாய் பணம் இருந்தது. அந்த பணத்துடன் 38 சவரன் தங்க நகை, ஒரு கிலோ 320 கிராம் வெள்ளி, 27 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நிரந்தர வைப்பு தொகைக்காண சான்றிதழ்கள், 11 வங்கி கணக்கு புத்தகங்கள், வங்கி லாக்கர் சாவி ஆகியவற்றையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.

ஷோபனா வாங்கிக்குவித்த லஞ்சப்பணத்தின் ஒரு பகுதி மட்டுமே சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் அவரது வங்கி லாக்கரை திறந்து விரிவான சோதனை நடத்தவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தரமான கட்டிடங்கள் கட்டப்படுகிறதா என்று மேற்பார்வை செய்வதற்கு செயற்பொறியாளராக அரசிடம் சம்பளம் பெற்றுவரும் ஷோபனா, தான் வாங்கும் சம்பளத்தை விட 100 மடங்கு தொகையை லஞ்சமாக பெற்றுள்ளது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டு, ஒப்பந்ததாரர்களை மிரட்டி கைகொள்ளா அளவுக்கு லஞ்சம் வாங்கிக்குவித்த ஷோபனாவிடம் கைப்பற்றப்பட்ட பணத்தை அரசு கரூவூலத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று சுட்டிக்கட்டும் சமூக ஆர்வலர்கள்,கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு, ஓய்வுக்கு பின்னர் இவர்களுக்கு வழங்கக் கூடிய பணப்பலன்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments