ரூ.50 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயன்ற கும்பல்... மென்பொறியாளரை கடத்தி மிரட்டல்

0 2882

சென்னையில் 50 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரிக்க, மென்பொருள் நிறுவன பொறியாளரை கடத்தி ஒரு மாதத்திற்கும் மேலாக விடுதி அறையில் அடைத்து வைத்து மிரட்டியதாக ரியல் எஸ்டேட் அதிபருடன் ரவுடி கும்பலைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் துளசி வம்சி கிருஷ்ணா. எம்.பி.ஏ பட்டதாரியான இவர் பெங்களூருவில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிப்புரிந்து வருகிறார்.

இவரது குடும்பத்திற்கு சொந்தமாக சென்னை ஆலந்தூர் திருவள்ளூர் நகரில் சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பில் சுமார் 40 ஆயிரம் சதுர அடி நிலம் உள்ளது.

இந்த நிலத்தை விற்பது தொடர்பாக சென்னை வந்த மென் பொறியாளர் வம்சி கிருஷ்ணாவை காணவில்லை என அவரது தாயார் ரூபா சென்னை காவல் துறையில் புகார் அளித்திருந்தார். அதே போன்று பெங்களுருவிலும் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

சுமார் 40 நாட்களாக வம்சி கிருஷ்ணா குறித்த தகவல் எதுவும் தெரியாமல் இருந்த நிலையில், தன்னை ஒரு கும்பல் கடத்தி வைத்து மிரட்டுவதாக அவரது தாயாரான ரூபாவிடம் திங்களன்று செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். உடனடியாக ரூபா விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தனது மகன் கடத்தி வைக்கப்பட்டு இருப்பது பற்றி தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து உடனடியாக களத்தில் இறங்கிய போலீசார், செல்போன் சிக்னல் மூலம் துப்பு துலக்கினர். விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பாலாஜி என்பவர், நிலத்தை விற்றுக் கொடுப்பதாக வம்சி கிருஷ்ணாவிடம் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து விருகம்பாக்கம் போலீசார் தனிப்படை அமைத்து, அங்குள்ள தனியார் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வம்சி கிருஷ்ணாவை மீட்டனர்.

கடத்தல் கும்பலைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பாலாஜி, சரித்திர பதிவிட்டு குற்றவாளியும் பிரபல ரவுடியுமான ஸ்பீடு செல்வம், அவனது கூட்டாளிகள் ஜான்சன், திருமுருகன், சுரேஷ் குமார் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரவுடி செல்வநேசன் என்ற ஸ்பீடு செல்வம் மீது பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

விசாரணையில், வம்சி கிருஷ்ணாவின் நிலத்தை விற்று தருவதாக அணுகிய ரியல் எஸ்டேட் அதிபர் பாலாஜி, நிலத்திற்கு சரியான வழி இல்லாததால் அதனை விற்பதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும், எனவே தனது பெயருக்கு பொது அதிகாரம் தந்தால் தன்னால் அதை சுலபமாக விற்பனை செய்து தர முடியும் என கூறியுள்ளார்.

அதற்காக இரண்டு லட்ச ரூபாயை பாலாஜி முன்பணமாக வம்சி கிருஷ்ணாவுக்கு கொடுத்துள்ளார். இதனை நம்பிய வம்சி கிருஷ்ணா பொது அதிகாரம் வழங்கி, நிலம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பாலாஜியிடம் கொடுத்துள்ளார்.

அதனை வைத்துக் கொண்டு வம்சி கிருஷ்ணாவின் நிலத்தை அபகரிக்க திட்டமிட்டு பாலாஜி, ரவுடி ஸ்பீடு செல்வம் உட்பட 5 பேர் இணைந்து அவரை கடத்தி விருகம்பாக்கத்தில் உள்ள விடுதியில் அடைத்து வைத்து, 10 கோடி பணம் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் நிலத்தை எழுதி கொடுக்க வேண்டும் என கொலை மிரட்டல் விடுத்து வந்திருப்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments