கேரளத்தில் கனமழை, வெள்ளப்பெருக்கு - 18 பேர் பலி

0 3463
கேரளத்தில் கனமழை, வெள்ளப்பெருக்கு - 18 பேர் பலி

கேரளாவின் தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களை புரட்டிப் போட்டுள்ள கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையுடன், ராணுவம், கடற்படை, விமானப் படை சார்பிலும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கடந்த 2 நாட்களாக கேரள மாநிலத்தில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. இதன் காரணமாக அம்மாநிலத்தின் கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா, இடுக்கி, பத்தனம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் சாலைகள், வீடு என அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இடுக்கி மாவட்டம் பீர்மேடு பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 27 சென்டி மீட்டர் மழைப் பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டு பெய்த பெருமழையின் போது ஏற்பட்ட சூழல் தற்போதும் நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெற்கு மற்றும் மத்திய கேரள மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 10-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

கோட்டயம் மாவட்டம் கூட்டிக்கல், பெருவந்தனம் கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து மண்ணுக்குள் புதைந்தது.

மேலும், இடுக்கியில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவால் 12 பேர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரளாவில் மழை விடாமல் தொடர்ந்து பெய்தாலும், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், கடற்படை மற்றும் விமானப் படை சார்பிலும் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

கடற்படையின் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், விமானப்படையின் ஹெலிகாப்டர் உதவியுடன் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

மழை நிவாரணப் பணிகள் தொடர்பாக அவசர ஆலோசனை நடத்திய முதலமைச்சர் பினராயி விஜயன், கேரள மாநிலத்தில் நிலைமை மிகவும் மோசமான உள்ளதாக தெரிவித்தார். மக்களின் உயிர்களைக் காக்க அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டர் அவர், நிவாரண முகாம்கள் துரிதமாக அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோட்டயம், வயநாடு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு இன்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பத்தனம்திட்டாவிலும் தொடர்ந்து கனமழை பெய்வதால், பக்தர்கள் 2 நாட்களுக்கு சபரிமலைக்கு வர வேண்டாம் என மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளர். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் மத்திய அரசு செய்திடும் என உறுதியளித்துள்ளார். தேசிய பேரிடர் மீட்புப் படை ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளதை குறிப்பிட்ட அவர், அனைவரின் பாதுகாப்பிற்காக பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments