தமிழகத்தில் எல்லா நாட்களிலும் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி..!

0 4576

தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளை அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், வருகிற 31 ஆம் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் கூடுதல் தளர்வுகளை அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இன்று முதல் ஏற்கனவே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து வகைக் கடைகள், உணவகங்கள் மற்றும் அடுமனைகள் இரவு 11 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

மேலும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே போன்று தனிப் பயற்சி நிலையங்கள், அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் ஆகியவையும் இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.   

நவம்பர் ஒன்றாம் தேதி முதல் மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும், மாதாந்திர மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகள், மழலையர் விளையாட்டு பள்ளிகள் மற்றும் நர்சரி அங்கன்வாடி பள்ளிகள் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் முழுமையாக செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காப்பாளர், சமையலர் உட்பட அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுகிழமைகளில் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி தரப்பட்டுள்ளது.

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 நபர்கள் பங்கு பெறவும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்கள் வரை கலந்து கொள்வதற்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் கொரோனா தடுப்புக்கான வழிகாட்டு நடைமுறைகளை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments