வாங்க நடிக்கலாம்.. போலி இயக்குனரின் போங்காட்டம்..!

0 3065
வாங்க நடிக்கலாம்.. போலி இயக்குனரின் போங்காட்டம்..!

சினிமாவில் நடிக்கவைப்பதாகக் கூறி பல பெண்களை சீரழித்து, அவற்றை வீடியோவாகவும் எடுத்து வைத்து அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்த போலி இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளான். துப்பாக்கி வடிவிலான சிகெரெட் லைட்டரை வைத்துக் கொண்டு "சீன்" போட்டவன் சிக்கிய பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

பார்ப்பதற்கு அப்பாவி போல் கையைக் கட்டிக்கொண்டு நிற்கும் இவன்தான் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த இமானுவேல்ராஜா. சில தினங்களுக்கு முன் தனது வழுக்கைத் தலையில் "விக்" ஒன்றை வைத்துக் கொண்டு, பணக்கார தோற்றத்துடன் இராமேஸ்வரம் வந்து இறங்கிய இமானுவேல்ராஜா, நாளொன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் வாடகை வசூலிக்கும் நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்குச் சென்று அறை எடுத்துள்ளான். பாம்பன் பகுதியைச் சேர்ந்த ஒருவரை அல்லக்கையாக வைத்துக் கொண்டு, தன் பெயர் சக்தி என்றும் திரைப்பட இயக்குனர் என்றும் இராமேஸ்வரம் சுற்றுவட்டாரத்தில் திரைப்படம் ஒன்று எடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளான்.

மறுநாள் தனது அல்லக்கையுடன் தனுஷ்கோடி சென்ற இமானுவேல்ராஜா, அங்குள்ள கோவில் ஒன்றில் பூசாரியாக பணியாற்றிய கார்த்திக்ராஜா என்பவரைச் சந்தித்து, தாம் விரைவில் எடுக்கவுள்ள திரைப்படம் ஒன்றில் பூசாரியாக நடிக்க ஆள் தேவை என்றும் 10 லட்ச ரூபாய் சம்பளம் தருவதாகவும் கூறியுள்ளான். இமானுவேல்ராஜாவின் பேச்சிலும் அணுகுமுறையிலும் நம்பிக்கை ஏற்படவே, அவனது வலையில் விழுந்த கார்த்திக்ராஜா, தனது மனைவிக்கும் படத்தில் ஒரு கதாபாத்திரம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார்.

அதற்கு ஒப்புக்கொண்ட இமானுவேல்ராஜா, படத்துக்கான பட்ஜெட்டில் துண்டு விழுவதாகக் கூறி, ஒன்றரை லட்ச ரூபாய் பணம் கொடுக்குமாறும் சம்பளத்தோடு சேர்த்து அதனைக் கொடுத்துவிடுவதாகவும் கூறியுள்ளான். அதனை நம்பி கார்த்திக்ராஜாவும் பணத்தைக் கொடுத்துள்ளார்.

சில தினங்கள் கழித்து, தாம் தங்கி இருக்கும் நட்சத்திர விடுதியில் "ஆடிஷன்" நடக்கவுள்ளதாகவும் மனைவியை அழைத்துக் கொண்டு வருமாறும் இமானுவேல்ராஜா கூறியதை நம்பி, மனைவியுடன் அங்கு சென்றுள்ளார் கார்த்திக்ராஜா. இமானுவேல்ராஜாவின் அறைக்கு வெளியே காத்திருந்தபோது, அவனது அறையிலிருந்து ஒரு பெண் அழுதுகொண்டே வெளியில் வந்துள்ளார்.

இமானுவேல்ராஜாவின் ஆசைவார்த்தையில் ஏமாந்து, வீடியோவில் சிக்கி, அவன் கேட்ட பணத்தை கொடுப்பதற்காக திருச்சியில் இருந்து அந்தப் பெண் வந்துள்ளார். 3 லட்ச ரூபாயை இமானுவேல் கேட்ட நிலையில், தன்னிடம் 56 ஆயிரம் ரூபாய் மட்டுமே உள்ளது எனக் கொடுத்துள்ளார் அந்தப் பெண். ஆனால் மீதிப் பணமும் சில மணி நேரத்தில் வேண்டும் என்றும் இல்லை என்றால் அவருடன் தனிமையில் இருந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றிவிடுவேன் என்றும் இமானுவேல்ராஜா மிரட்டியுள்ளான்.

என்ன செய்வது என்று தெரியாமல் அழுதுகொண்டே வெளியில் வந்த அந்தப் பெண், மனைவியுடன் கார்த்திக்ராஜாவைப் பார்த்துவிட்டு, இருவரையும் தனியே அழைத்துச் சென்று நடந்த விவரங்களைக் கூறியுள்ளார்.

கோபத்துடன் தனது பணத்தை திருப்பி வாங்கலாம் என்று இமானுவேல்ராஜாவின் அறைக்குள் சென்ற கார்த்திக்ராஜா, அங்கு கைத்துப்பாக்கி ஒன்று இருப்பதைப் பார்த்து ஜெர்க்காகி, ஒன்றும் பேசாமல் வெளியே வந்துள்ளார். உடனடியாக அவர் இராமேஸ்வரம் போலீசாருக்குத் தகவல் கொடுக்க, துப்பாக்கி இருப்பதாகக் கூறியதால் அவர்கள் கியூ பிரிவு போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

கியூ பிரிவு போலீசார் விடுதிக்கு வருவதற்குள் விஷயம் தெரிந்து உஷாரான இமானுவேல்ராஜா அறையை காலி செய்துகொண்டு தப்பியுள்ளான். உடனடியாக ரோந்து போலீசாரை உஷார்படுத்தி, அவனை பேருந்து நிலையத்தில் வைத்து போலீசார் மடக்கியுள்ளனர். இமானுவேல்ராஜா வைத்திருந்த துப்பாக்கியை வாங்கிப் பார்த்தபோதுதான் அது வெறும் சிகரெட் லைட்டர் என்பது தெரியவந்தது.

இமானுவேல்ராஜாவிடமிருந்து ஏராளமான ஏடிஎம் கார்டுகள், காசோலைகள், கவரிங் நகைகள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர். அவனது செல்போனில் ஏராளமான பெண்களுடன் தனிமையில் இருந்த வீடியோவும் இருந்துள்ளது. விசாரணையில் ஆபாச இணையதளம் மூலம் அறிமுகமான இரண்டு பெண்களை வைத்துக் கொண்டு, அவர்கள் மூலம், கணவரை இழந்த கைம்பெண்கள், சினிமாவில் நடிக்க முயற்சி செய்துகொண்டு இருக்கும் இளம்பெண்கள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோரை தனது வலையில் வீழ்த்தியுள்ளான் இமானுவேல்.

தனது புதிய படத்தில் நடிக்க வைப்பதாகக் கூறி அவர்களை வரவழைத்து, தனிமையை அனுபவித்துவிட்டு, அதனை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டில் லட்சக்கணக்கில் பணம் பறித்ததும் விசாரணையில் தெரியவந்தது. 

திரைப்படத்தில் நடிக்க விருப்பம் உள்ள ஆணோ, பெண்ணோ, வாய்ப்புகள் தேடும்போது மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கும் போலீசார், வாய்ப்பு கொடுக்கிறேன் என முன்பணம் கேட்பவர்கள், தப்பான நோக்கத்துடன் அழைப்பவர்கள் உள்ளிட்டோரை கண்ணை மூடிக்கொண்டு புறக்கணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments