பெண் சடலம் மீட்பு.. விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் கைது.!

0 3988

கோவை சின்னியம்பாளையத்தில் ஓடும் காரிலிருந்து பெண்ணின் சடலம் தூக்கி வீசப்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில், திடீர் திருப்பமாக விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றதாக கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் சோதனை சாவடி அருகே, கடந்த 6-ந் தேதி சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் உருக்குலைந்த நிலையில் சாலையில் இருந்து மீட்கப்பட்டது.

சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, அந்த சடலம் காரில் இருந்து வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. ஆனால், பிரேத பரிசோதனையில் பெண் கொலை செய்யப்பட்டதற்கான தடயங்களோ, காயங்களோ இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, விபத்து நிகழ்ந்திருக்கக் கூடும் என சந்தேகித்த போலீசார், கோவை விமான நிலையத்தில் இருந்து சின்னியம்பாளையம் வரை குறிப்பிட்ட நேரத்தில் அந்த சாலையில் சென்ற அனைத்து வாகனங்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

அத்தோடு, சடலமாக மீட்கப்பட்ட பெண் அந்த பகுதியில் சுற்றித்திரியும் ஆதரவற்ற பெண் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 6 ஆம் தேதி அதிகாலை, அந்த பெண் சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த இன்னோவா கார் மோதியதாகவும், இதில் நிலைத்தடுமாறி விழுந்த அந்த பெண்ணின் மீது பல வாகனங்கள் ஏறி இறங்கியதாகவும் போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.

இதையடுத்து, பெண் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய கோவை காளப்பட்டியைச் சேர்ந்த ஃபைசல் என்பவனை போலீசார் கைது செய்தனர். திருச்சியில் இருந்து சென்று கொண்டிருந்த போது இந்த விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்துள்ளது.

மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு, காரை யாருக்கும் தெரியாமல் பட்டிணம்புதூர் பகுதியில் மெகானிக்கல் ஷெட்டில் பைசல் நிறுத்தி வைத்திருந்ததாகவும், பெண்ணின் ஆடைகள் அந்த இன்னோவா காரில் சிக்கியிருந்ததாகவும் கூறும் போலீசார், காரை பறிமுதல் செய்து, விபத்தை ஏற்படுத்துதல், அதிவேகமாக செல்லுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments