மதம், அரசியல் சார்ந்த நிகழ்வுகள்..! அக்.31 வரை தடை நீட்டிப்பு..!

0 2466
மதம், அரசியல் சார்ந்த நிகழ்வுகள்..! அக்.31 வரை தடை நீட்டிப்பு..!

தமிழ்நாட்டில் மதம், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கான தடையை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், பொதுமக்கள் கூட்டமாக உள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகளை செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து ஏற்கனவே அரசு ஆணையிட்டுள்ளது.  இந்த நிலையில் திருவிழாக்கள், அரசியல், சமூகம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அக்டோபர் 31ஆம் தேதி வரை தடையை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நலனைக் கருத்தில் கொண்டு, சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் பண்டிகைகளை தங்கள் இல்லங்களிலேயே கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா 3ஆம் அலையைத் தடுக்க அரசின் முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் கேட்டுக்கொண்டுள்ள முதலமைச்சர், பொதுப் போக்குவரத்தினை அவசியத் தேவைக்காக மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

தேச விடுதலைக்காகவும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட தலைவர்களுக்கு அவர்களது பிறந்தநாள் மற்றும் நினைவுநாளின்போது மாலை அணிவித்து மரியாதை செலுத்த அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுவதாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மரியாதை செய்யப்படும் தலைவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்கள் வரையில் மாலை அணிவிக்க அனுமதி வழங்கப்படுவதாகவும் பதிவுபெற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் 5 பேருக்கு மிகாமல், ஆட்சியரின் முன் அனுமதி பெற்று மாலை அணிவிக்க அனுமதி வழங்கப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

கூட்டம் கூடும் இடங்களுக்கோ, நிகழ்வுகளுக்கோ செல்வதை பொதுமக்கள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதோடு, நிபா வைரஸின் தாக்கமும் காணப்படுவதால், தமிழகத்திலிருந்து அம்மாநிலத்துக்கான பேருந்து போக்குவரத்துக்கு தடை விதித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments