ஓடும் லாரியில் தார்ப்பாய் கூரையை கிழித்த களவாணிகள்... 5 பேர் கும்பல் சிக்கிய பின்னணி.!

0 19009

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தே.கல்லுப்பட்டி, பேரையூர், கள்ளிகுடி உள்ளிட்ட பகுதிகள் வழியாக மதுரை மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து சரக்குகளை கொண்டு செல்லும் லாரிகள் மற்றும் சிறிய சரக்கு வாகனங்களின் தார்பாயை கிழித்து நெடுஞ்சாலை சினிமாபாணியில் அடிக்கடி சரக்குகள் திருடு போவதாக போலீசாரிடம் ஏராளமான புகார்கள் குவிந்து வந்தன.

இது குறித்து புகார் அளிக்க வரும் லாரி ஓட்டுநர்களிடம் கொள்ளை நடந்த இடம் எது? எனக்கேட்டு புகார்களை வாங்காமல் சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகின்றது. 

இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு மதுரையில் இருந்து துணி பண்டல்களை ஏற்றிக்கொண்டு தே.கல்லுப்பட்டி வழியாக தென்காசிக்கு சென்று கொண்டிருந்த டாட்டா ஏஸ் வாகனத்தை ஷேர்-ஆட்டோ ஒன்று பின் தொடர்ந்தது. அந்த ஷேர் ஆட்டோவில் சென்ற மூன்று பேர் கண் இமைக்கும் நேரத்தில் டாடா ஏஸ் வாகனத்திற்கு தாவிச்சென்று, தார்ப்பயை கிழித்துள்ளனர்.

உள்ளே இருந்த துணிபண்டல்களை அந்த ஓட்டுனருக்கு தெரியாமல் ஒவ்வொன்றாக திருடி ஓடும் டாடா ஏஸ் வாகனத்திலிருந்து ஷேர்-ஆட்டோவிற்கு மாற்றியுள்ளனர். சரக்குவாகனம் தே.கல்லுப்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென சரக்குவாகன ஓட்டுனர் டீ குடிப்பதற்காக வாகனத்தை சாலையோரம் உள்ள டீ கடைக்கு ஒதுக்கியுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத கொள்ளையர்கள் சட்டென்று சரக்குவாகனத்தின் மேல் பகுதியில் ஒளிந்து கொள்ள முயன்றுள்ளனர்.

அதற்குள்ளாக சரக்கு வாகன ஓட்டுனர் அந்த கொள்ளையர்களை கண்டு கூச்சலிட்டதோடு, அக்கம் பக்கத்தில் நின்ற ஓட்டுனர்களின் துணையுடன் அந்த நெடுஞ்சாலை கொள்ளையர்கள் மூவரையும் மடக்கி பிடித்தனர். இதனை கண்டதும் அருகில் வந்த ஷேர் ஆட்டோ விலகி தப்பிச்சென்றது.இதையடுத்து பிடிபட்ட 3 கொள்ளையர்களையும், தே.கல்லுப்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த கொள்ளை கும்பல் முதலில் லாரி ஒன்றின் தார்ப்பாயை கிழித்து சில துணி பண்டல்களை களவாண்டதும், அதன் தொடர்ச்சியாக டாடா ஏஸ் வாகனத்தில் கைவரிசை காட்டிய போது சிக்கியதும் தெரியவந்தது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த தே.கல்லுப்பட்டி போலீசார் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட கொசவபட்டி சேர்ந்த விஜி என்கின்ற விஜயன், சந்திரசேகர், நாடு முதலை குலத்தைச் சேர்ந்த பரத் என்கின்ற பரதன், சதீஷ், சின்னக்கருப்பன் ஆகிய 5 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த கொள்ளை கும்பல் கடந்த சில மாதங்களில் மட்டும் 7 லாரிகளில் தார்பாய் கூரையை கிழித்து லட்சகணக்கான மதிப்புள்ள பொருட்களை கொள்ளைய்யடித்தது தெரியவந்தது.

இந்த கும்பலை போல மேலும் 5 கும்பல்கள் ஷேர் ஆட்டோ மற்றும் குட்டியானை போன்ற வாகனங்களில் வலம்வருவதாகவும், சரக்கு ஏற்றிச்செல்லும் வாகனங்களை குறிவைத்து இந்த கொள்ளை சம்பவத்தை நீண்ட நாட்களாக அரங்கேற்றிவருவதாகவும் கூறப்படுகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments